×

பேராவூரணி பகுதியில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிப்பு பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை

பேராவூரணி, மே 14: பேராவூரணி பகுதியில் சட்டவிரோதமாக மின்மோட்டார் உதவியுடன் குடிநீரை உறிஞ்சினால் இணைப்பு துண்டிப்பதுடன் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) பொன்னுசாமி, தலைமை எழுத்தர் சிவலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பேராவூரணி தேர்வு நிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்குள்ள 11 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் நகரின் 18 வார்டுகளுக்கும், 3,100 தனியார் இணைப்புகள் மூலமும், 525 பொது குடிநீர் இணைப்பின் மூலமும், நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 100 லிட்டர் வீதம் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இதில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் 10 லட்சம் லிட்டரும், உள்ளூர் ஆதாரங்கள் மூலம் 15 லட்சம் லிட்டரும்  பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.


இந்நிலையில் தற்போது கோடைகாலத்தில் கடும் வறட்சி நிலவுவதால் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் கிடைக்கக்கூடிய நீராதாரத்தை பொருத்து பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டுமென கலெக்டர் அண்ணாதுரை, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் குற்றாலிங்கம் உத்தரவிட்டுள்ளனர். எனவே பேரூராட்சி மூலம் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தினசரி கண்காணிப்பின் மூலம் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சில நாட்களாக தனியார் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளவர்கள் மின்மோட்டார் பயன்படுத்தி தண்ணீரை சட்டவிரோதமாக உறிஞ்சுவது தெரிய வந்துள்ளது. இதனால் அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் விநியோகம் செய்வதில் தடங்கல் ஏற்படும்.


எனவே பேரூராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும் குடிநீரை தென்னந்தோப்புகள், தோட்டங்களுக்கு பயன்படுத்தக்கூடாது. குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டாரை வைத்து தண்ணீர் உறிஞ்சுவது, குடிநீரை எடுப்பது சட்டப்படி குற்றமாகும். ஆய்வின்போது குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டால் உடனடியாக பறிமுதல் செய்யப்படும்.  மேலும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு வருங்காலங்களில் இணைப்பு வழங்கப்படாது. மேலும் அபராதம் வசூல் செய்யப்படுவதோடு நீதிமன்ற நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும். எனவே கோடைகாலத்தில் சிக்கனமாக குடிநீரை பயன்படுத்துவதோடு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் பேரூராட்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சட்டவிரோதமான முறையில் மின்மோட்டாரை பயன்படுத்துபவர்கள் நடவடிக்கைகளை தவிர்க்க உடனடியாக அதை அகற்றி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : area ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...