×

கும்பகோணம் பகுதியில் பெரிய நெல்லிக்காய் விற்பனை ஜோர் ஒரு கிலோ ரூ.100

கும்பகோணம், மே 14: கோடை காலத்தையொட்டி கும்பகோணம் பகுதியில் வெளிமாவட்டத்தில் இருந்து வந்த பெரிய நெல்லிக்காய் விற்பனை ஜோராக நடக்கிறது. ஒரு கிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. கும்பகோணம் பகுதியில் கடந்த 2 மாதமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தற்போது அக்னி நட்சத்திர வெயிலால் தொண்டை வறண்டும், சருமங்கள் உலர்ந்தும், வியர்வையால்தினம்தோறும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் கோடை வெயிலுக்கு உகந்த பெரிய நெல்லிக்காய்  விற்பனை தஞ்சை, கும்பகோணம் பகுதியில் விறுவிறுப்பாக  நடந்து வருகிறது. தற்போது தஞ்சை மாவட்டத்தில் பெரிய நெல்லிக்காய் விளைச்சல் குறைந்ததால் வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் விற்பனைக்காக வருகிறது. பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டால் முடி நன்கு வளரும், உடல்நல பிரச்னைகளை குணப்படுத்தும்.

இதில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் கார்போ ஹைட்ரேட் போன்றவைகள் வளமாக நிறைந்துள்ளது. பெரிய நெல்லிக்காய் ஜூஸ் சாப்பிட்டால் உடல் எடை குறையும். ஞாபக சக்தியை அதிகரிக்கும், ரத்த சோகை நீங்கும். பெரிய நெல்லிக்காய்  சித்த மருத்துவத்துக்கான சிறந்த மருந்தாக பயன்பட்டு வருகிறது. பழங்காலத்தில் தமிழகத்தில் தான் அதிகமாக நெல்லிக்காய் விளைந்தது. தற்போது போதுமான தண்ணீர் இல்லாமலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும் பெரிய நெல்லிக்காய் மரங்கள் பட்டுப்போய் விட்டன. தஞ்சை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பெரிய நெல்லிக்காய் மரங்கள் அழிந்துவிட்டது. தற்போது வெளி மாவட்டத்திலிருந்து விற்பனைக்காக வந்துள்ளது. தண்ணீர் இல்லாமல் நிலத்தடி நீர்மட்டம் மேலும் குறைந்தால் இன்னும் சில ஆண்டுகளில் தஞ்சை மாவட்டத்தில் பெரிய நெல்லிக்காய் மரங்களே அழிந்து போகும் நிலை ஏற்படவாய்ப்புள்ளது. மேலும் கோடை வெயிலால் பெரிய நெல்லிக்காய்கள் பழுத்தும், வெம்பியும் விடுவதால் 100 கிலோவுக்கு சுமார் 5 கிலோ வரை வீணாகி விடுகிறது. இதனால் கடந்தாண்டு ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது விளைச்சல் இல்லாமல் வெளிமாவட்ட பெரிய நெல்லிக்காய் வரவால் கிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா