×

அலங்காநல்லூர் அருகே மழை வேண்டி அம்மனுக்கு வளைகாப்பு

அலங்காநல்லூர், மே 14: அலங்காநல்லூர் அருகே மழை வேண்டி அம்மனுக்கு வளைகாப்பு திருவிழா நடந்தது. அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி வகுத்து மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிவ சுப்பிரமணிய ஆலயத்தில் தில்லைகாளியம்மனுக்கு அமுதுபடையல் திருவிழா நடந்தது. இந்த விழாவிற்காக  அங்குள்ள மந்தைதிடலில் இருந்து ஏராளமான பக்தர்கள்  நேர்த்திக்கடனாக பால்குடம், அக்னிசட்டி எடுத்து சென்றனர். பின் சிறப்பு அபிஷேக, அர்ச்சனைகளுடன் அம்மனுக்கு  வழிபாடு நடந்தது.

மேலும் 24 வகையான உணவு படையல்கள், வண்ண வளையல்கள், சேலைகள் வைத்து உலக நன்மைக்காகவும், மழைவேண்டியும் அம்மனுக்கு சிறப்பு வளைகாப்பு பூஜை நடந்தது. இதில் குழந்தை பாக்கியம், திருமண தடை நீங்க வேண்டி வந்த பெண்களுக்கு, அம்மன் அணிந்த தாலி, வளையல்கள், சேலைகள் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

மாலையில் உலக நன்மைக்காவும், மழைவேண்டியும் திருவிளக்கு பூஜை, மஹா யாகங்கள், புஷ்பார்ச்சனை நடந்தது. பின் நள்ளிரவில் சக்தி கிடாய் வெட்டப்பட்டு உக்கிர உதிர பூஜை நடந்த பின் அன்னதானம் வழங்கப்பட்டது. அதிகாலையில் அடசல் பூஜை, சாந்திபூஜையுடன் திருவிழா நிறைவு பெற்றது. இந்த விழா ஏற்பாடுகளை ஓம் ஜி ஸ்ரீ ஹரிபகவான் அறக்கட்டளை மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Shruthi Shiva ,Alankanallur ,
× RELATED அலங்காநல்லூர் அருகே ஓட, ஓட விரட்டி வாலிபர் படுகொலை