×

என்னய்யா வேல பார்க்குறீங்க? பறக்கும்படையை பிடித்த பார்வையாளர்

திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள பறக்கும்படையினர் எவ்வாறு  செயல்படுகின்றனர் என தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் மெயின்  ரோட்டில் மட்டுமே சென்று வந்தது தெரிய வந்தது. கிராம பகுதியிலோ அல்லது  தெருக்களிலோ செல்லவில்லை என கண்டுபிடித்தனர்.  

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதில் திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட 37 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் நடைபெற இன்னும் 5 நாட்களே உள்ளது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக கண்காணிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் மற்றும் போலீசார் சேர்ந்து ஒரு குழு அமைக்கப்பட்டது.

இத்தொகுதியில் மட்டும் மொத்தம் 45 பறக்கும்படை குழுக்கள் போடப்பட்டுள்ளன. இந்த தேர்தலை கண்காணிக்க பொது பார்வையாளராக ஓம்பிரகாஷ் ராய், செலவின பார்வையாளராக அஜாய் ஜி.டோக்கி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தொகுதியில் உள்ள பறக்கும்படையினர் எவ்வாறு செயல்படுகின்றனர் என ஆய்வு செய்தனர். அப்போது இக்குழு தொகுதியில் மெயின் ரோட்டில் மட்டுமே சென்று வந்தது தெரிய வந்தது. கிராம பகுதியிலோ அல்லது தெருக்களிலோ செல்லவில்லை என கண்டுபிடித்தனர்.

இதே போல், தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளுங்கட்சியினர் வாக்காளருக்கு பணம் விநியோகம் செய்யவுள்ளதாகவும், தேர்தல் விதி மீறல் நடப்பதாகவும் பல்வேறு புகார்கள் தேர்தல் பார்வையாளர்களுக்கு வந்துள்ளன.  புகார்கள் குறித்து விசாரித்து தகவல் தரும்படி தேர்தல் அதிகாரிகளுக்கு பார்வையாளர்கள் பரிந்துரை செய்கின்றனர். அனைத்து புகாரும் பொய் என அதிகாரிகள் திரும்ப தெரிவித்து வருகின்றனர். ஆனால் பார்வையாளர்கள் சில இடங்களில் நேரடியாக விசாரித்ததில் அதிகாரிகள் புகாரை மறைப்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

‘எங்களுக்கு வந்த புகார் அனைத்தும் பொய் என கூறுகிறீர்கள். பல புகார்களை மறைக்கிறீர்கள். ஒரு தலைபட்சமாக செயல்படுவது போல் தெரிகிறது’ என இவர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் தங்கள் மன வேதனையை தெரிவித்துள்ளனர். ‘‘பணப் பட்டுவாடா செய்யக்கூடாது என தேர்தல் விதியில் உள்ளது. தவறுகளுக்கு துணைபோகும் வகையில், இதுபோன்று அதிகாரிகள் செயல்பட்டால், தேர்தல் ஆணையத்திடம் தங்கள் அறிக்கையுடன், தவறுகளையும் சுட்டிக்காட்டி தெரிவிப்போம்’’ என்று பார்வையாளர்கள் எச்சரித்தனர். இந்த எச்சரிக்கை தேர்தல் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : viewer ,
× RELATED நாடாளுமன்றத்தில் பார்வையாளர் அனுமதி ரத்து