×

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வர்த்தகர்கள், அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் கலெக்டர் அறிவுரை

புதுக்கோட்டை, மே 14: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வர்த்தகர்கள், அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று புதுகை கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை புதுக்கோட்டை மாவட்டத்தில் முற்றிலுமாக தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து வர்த்தக சங்கம் மற்றும் நுகர்வோர் அமைப்பினருடனான ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அதிகாரி ராதாஜெயலெட்சுமி, புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், வர்த்தக சங்க நிர்வாகிகள், நுகர்வோர் அமைப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  தொடர்ந்து கலெக்டர் உமா மகேஸ்வரி நிருபர்களிடம் கூறுகையில், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தமிழகத்தில் முற்றிலுமாக தடை செய்யப்பட்டு உள்ளது.

இதில் தடை செய்யப்பட்ட தூக்கி எறியப்படும் நெகிழிகளின் பிளாஸ்டிக் பட்டியல் எந்த தடிமனாக இருந்தாலும் உணவு பொருட்களை கட்ட உபயோகிக்கும் பிளாஸ்டிக் ஒட்டும் தாள், உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், மேலும் பிளாஸ்டிக்காலான தெர்மாக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித கப்புகள், பிளாஸ்டிக் டீ கப்புகள், பிளாஸ்டிக் கப்புகள், டம்ளர்கள், தெர்மாக்கோல் கப்புகள், நீர் நிரப்ப பயன்படும் பைகள், பொட்டலங்கள், பிளாஸ்டிக்காலான உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் பைகள் எந்த அளவிலும், எந்த தடிமனாக இருப்பினும், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித பைகள், பிளாஸ்டிக் கொடிகள், நெய்யாத பிளாஸ்டிக் பைகள் போன்ற பொருட்கள் தடை செய்யப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் பிளாஸ்டிக் பயன்பாடு முழுவதுமாக தடைசெய்யப்பட்டு உள்ளது. இதன்படி கடைகள், வணிக நிறுவனங்களில் அலுவலர்கள் மூலம் ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் நுகர்வோர் அமைப்பினர் பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருட்களான சணல் பை, பாக்கு மட்டை போன்ற பல்வேறு பொருட்கள் குறித்து நுகர்வோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்க்கும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாக தடுக்கும் வகையில் வர்த்தகர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Collectors ,
× RELATED சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான...