×

திருநள்ளாறு கோயிலுக்கு வரும் பக்தர்களை தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்க வேண்டும் போலீசாருக்கு எஸ்பி அறிவுறுத்தல்

காரைக்கால், மே14: திருநள்ளாறு கோயிலுக்கு வரும் பக்தர்களை தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்க வேண்டும் என போலீசாருக்கு எஸ்பி அறிவுறுத்தி உள்ளார். இலங்கை தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, திருநள்ளாறு தர்பாராண்யேஸ்வரர் கோயிலில், கோயில் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து போலீசார் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இலங்கை தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, காரைக்கால் மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா, போலீஸ் எஸ்.எஸ்.பி ராகுல் அல்வால் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள முக்கிய வழிப்பாட்டுத்தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள், கடற்கரை கிராமங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். விடுதிகளில் தங்கும் நபர்களிடம் கட்டாயம் அடையாள அட்டை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடியிருப்புவாசிகள் வாடகைக்கு வீடு எடுப்போரிடம் நன்கு விசாரித்துவிட்டு வீட்டை வாடகைக்கு தரவேண்டும், சந்தேகம் இருப்பின் அருகில் உள்ள காவல்நிலையத்தில் தகவல்தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், கோடை விடுமுறையையொட்டி, திருநள்ளாறு தர்பாராண்யேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருப்பதையொட்டி, கோயில் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்து, கோவில் நிர்வாக அதிகாரி வளாகத்தில் நேற்று போலீசார் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். கூட்டத்தில், கோவில் நிர்வாக அதிகாரி சுந்தர், எஸ்.பிக்கள் மாரிமுத்து, வீரவல்லபன், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில், கோவிலுக்கு வருகைதரும் பக்தர்களை, கோவில் வாசலில் மெட்டல் டிடெக்டர் வளைவு பாதை வழியாக (சோதனைக்கருவி) சோதனைச் செய்தபிறகே அனுமதிக்க வேண்டும். கூடுதல் மெட்டல் டிடெக்டர் வளைவு அமைக்க வேண்டும். கோயில் உள்ளே மற்றும் வெளிப்புறத்தில் சந்தேகம் படும்படியான நபர்கள் சுற்றிவந்தால், அருகில் உள்ள காவல்நிலையம் அல்லது, கோயில் வாசலில் பாதுகாப்பிற்கு உள்ள போலீசாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். கோயில் வாசலில் 24 மணி நேரமும் போலீசார் காவல் இருக்க வேண்டும். கோயிலைச் சுற்றியுள்ள விடுதிகளில் தங்கும் நபர்களின் முழு முகவரி, அடையாள அட்டை உள்ளிட்டவற்றை விடுதி நிர்வாகம் அவசியம் பெறவேண்டும். இதனை போலீசார் ரோந்துப்பணியின் போது தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என எஸ்.பிகள் போலீசாருக்கு அறிவுறுத்தினர்.

Tags : Devotees ,testing ,Tirunallar ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...