×

காரைக்கால் தனியார் துறைமுகம் அரசுக்கு செலுத்தும் வருவாயில் பாதியை மாவட்டத்துக்கு செலவு செய்ய வேண்டும் நாஜிம் வலியுறுத்தல்

காரைக்கால், மே 14:  காரைக்கால் தனியார் துறைமுகம் அரசுக்கு செலுத்தும் வருவாயில் பாதியை, காரைக்கால் மாவட்டத்துக்கே செலவு செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் நாஜிம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான நாஜிம் கூறியது:  காரைக்கால் மாவட்ட வளர்ச்சிக்கு, காரைக்காலில் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் 18 சதவீதம் நிதி ஒதுக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தப்பட்டது. இந்த நிதி சரியான முறையில் தரப்படுவதில்லை. காரைக்காலில் எந்தவொரு பணி செய்வதற்கும் நிதி இல்லை என்பதே பிரதானமாக உள்ளது. இந்நிலையில், காரைக்காலில் இயங்கும் தனியார் துறைமுகம், புதுச்சேரி அரசுக்கு தமது வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை காலாண்டு முறையில் அளித்து வருகிறது. குறிப்பாக, ஆண்டுக்கு ரூ.10 முதல் ரூ.12 கோடி வழங்கப்படுகிறது. துறைமுகத்தால் பல்வேறு சிக்கல்களை சந்திக்கும் மக்களுக்கு அந்த நிதியில் பாதியை வழங்குவதுதான் முறையாகும்.


புதுச்சேரி அரசு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் ஏனைய மக்களுக்கு ஏதேனும் நிவாரணம் தருவதாக அறிவிப்பு செய்து அது அரசாணையாக வெளியிட்டாலும், காரைக்காலில் வளர்ச்சிக்கான ஒருநிதி இருக்கும்பட்சத்தில், இந்த நிதியைக் கொண்டு நிவாரணத்தை உடன தந்து விட்டு, அரசின் நிவாரண நிதியை மாவட்டம் ரீஇம்பெர்ஸ்மென்ட் முறையில் பெற்றுக்கொள்ளலாம். இதுபோன்ற சூழல் காரைக்காலில் இதுவரை ஏற்படுத்தாதது வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருப்பதாகவே உணரமுடிகிறது. எனவே, காரைக்கால் தனியார் துறைமுகம் அரசுக்கு செலுத்தும் வருவாயில் பாதியை, காரைக்கால் மாவட்டத்துக்கே செலவு செய்ய வேண்டும் காரைக்கால் மாவட்ட கலெக்டரும் இதுசம்பந்தமாக உரிய அதிகாரிகளுக்கு கடிதம் எழுதவேண்டும் என்றார்.

Tags : Nazim ,Karaikal ,state ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...