×

கோடை சாகுபடிக்கு தயாராகும் திருச்சி மாவட்டம் விவசாய நிலங்களில் மண் பரிசோதனை பணி மும்முரம் மண்வளம் அறிந்து பயிரிட நடவடிக்கை

திருச்சி, மே 10:   திருச்சி மாவட்டத்தில் கோடை சாகுபடிக்காக விவசாய நிலங்களில் மண் பரிசோதனை பணி மும்முரம் நடந்து வருகிறது. இதனால் மண்வளம் அறிந்து பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. 100 டிகிரி வெயில் என்பது சாதாரண ஒன்றாகி போய்விட்டது. வழக்கமாகவே கோடைகாலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். ஆனால் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கிணறுகளில் தண்ணீர் வற்றிவிடும். பாசன நீர் தட்டுப்பாடு, நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிடும்.

இதனால் கோடை காலத்தில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் கோடை விவசாயம் செய்ய முடியாமல் தத்தளிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தற்போது மாவட்ட வேளாண்மைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மண்வள பரிசோதனை மையம் சார்பில் தற்போது மண்வளம் பரிசோதனை செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு ஒன்றியத்திலும் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர்களுக்கு அந்தந்த பகுதிகளின் விவசாய நிலங்களின் அட்சரேகை, பூமத்திய ரேகை குறித்து தகவல் பட்டியலை அனுப்பப்பட்டுள்ளது. அதன் பேரில் அந்த பட்டியலின்படி வேளாண் உதவி அலுவலர்கள் தங்கள் மொபைலில் இதற்காக உள்ள செயலியில் அட்சரேகை, பூமத்திய ரேகை எண்களை குறிப்பிட்டால், அந்த செயலி அந்த இடம் எங்கு உள்ளது என்ற மேப்பை காட்டுகிறது. அந்த மேப்பில் காட்டியுள்ளபடி சென்று மிகச்சரியாக அந்த விவசாய நிலத்தை அலுவலர்கள் அடைகின்றனர்.

அதன் பின்னர் அந்த இடத்தில் 50 செ.மீ. சுற்றளவிற்கு 50 செ.மீ. ஆழத்திற்கு மண் தோண்ட வேண்டும். இதில் முதல் 25 செ.மீ. ஆழம் தோண்டியபின் ஒரு கிலோ அளவு மண்ணை எடுத்து சேகரிக்க வேண்டும். அதன் பின்பு 50 செ.மீ. ஆழம் தோண்டியபின் அதில் ஒரு கிலோ மண் சேகரிக்க வேண்டும். அந்த இடத்தை அட்சரேகை, பூமத்திய ேரகையுடன் மொபைால் மூலம் படம் எடுக்க வேண்டும்.

அதன் பின்னர் இந்த இரண்டு மண் மாதிரிகளை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள மண் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். இதையடுத்து அந்த மண்ணை பரிசோதனைக்கு உட்படுத்தி அந்த மண்ணில் என்ன பயிர்களை பயிரிடலாம்? என்ன சத்து குறைவாக உள்ளது? அதற்கு என்ன உரம் இட வேண்டும்? கோடையில் என்ன பயிரிடலாம் என்பது குறித்து பரிசோதனை அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

இதற்காக விவசாயிகளுக்கு பிரத்யோகமாக மண்வள அட்டை வழங்கப்படுகிறது. அந்த அட்டையில் அந்த விவசாயியின் மண் வளம் குறித்து எழுதப்படுகிறது. இதனால் அந்த விவசாயி தனது மண்ணின் வளத்தை அறிந்துகொள்ள முடியும், அதற்கு ஏற்றார்போல் சரியான பயிரை பயிரிட்டு தண்ணீரை சிக்கனத்துடன், என்ன உரம் சத்து கம்மியாக உள்ளது என்பதை அறிந்து அந்த உரத்தை மட்டும் பயன்படுத்துவதால் செலவு குறைந்து, விவசாய உற்பத்தி திறன் அதிகரிக்கும். இது விவசாயிக்கு அதிக வருமானத்தை கொடுக்கும். இந்த திட்டத்தால் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் கோடை பருவத்தை நஷ்டம் இன்றி, லாபம் ஈட்டலாம் என்கின்றனர் வேளாண் அதிகாரிகள்.

Tags : Trichy District Soil ,lands ,
× RELATED 5 அடி பள்ளத்தில் சிக்கிய சாரங்கபாணி கோயில் தேர்