×

தலையில் குப்பை கொட்டியதாக புகார் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

ஊட்டி, மே 10: ஊட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் தற்போது உன்னத உதகை திட்டத்தின் கீழ் பொது இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படுவதில்லை. மாறாக, அனைத்து வீடுகளுக்கும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனர். இதில் வாகனங்கள் செல்ல முடியாத இடங்களில், ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு விசில் அடிப்பார். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் மற்றும் வணிக நிறுவனங்களை சேர்ந்தவர்கள் குப்பைகளை எடுத்து வந்து ஊழியர்களிடம் கொடுத்தால், அவர்கள் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக வாங்கி லாரிகளில் கொட்டுவது வழக்கம். இந்நிலையில், நேற்று வழக்கம் போல், தூய்மை பணியாளர்கள் சிலர் பாம்பேகேசில் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலக கேட் முன் வாகனத்தை நிறுத்திவிட்டு விசில் அடித்தனர். இதன் பின்அப்பகுதி வாசிகள் குப்பைகளை பை மற்றும் தொட்டிகளில் கொண்டு வந்து தூய்மை பணியாளர்களிடம் கொடுத்துள்ளனர். அப்ேபாது, ஒரு வாலிபர் குப்பைகளை எடுத்து வந்து நேரடியாக லாரியில் கொட்டியுள்ளார். இதில், குப்பைகள் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் தலை மீது விழுந்தது. இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கேட்டதற்கு அந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் பணியாளர்களை திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து அறிந்து வந்த நகாரட்சி ஊழியர்கள் அப்பகுதிக்கு சென்று சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மீண்டும் அந்த நபர் மற்றும் அவருடன் இருந்த சிலர் தூய்மைப் பணியாளர்களை தகாத வார்த்தைகள் பேசினர்.
இதனால் ஆதிரமடைந்த நகராட்சி ஊழியர்கள் அந்த நபரை கண்டித்து ஊட்டி நகராட்சி அலுவலகத்தை தூய்மைப் பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற நகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.  எனினும், தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட வாலிபர் பணியாற்றும் மார்க்கெட் கடைக்கு சென்று அங்கு போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் தூய்மைபணியாளர்களிடம் வருத்தம் தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பணியாளர்கள் பணிக்கு சென்றனர். இதற்கிடையே தகவல் அறிந்து வந்த போலீசார் இருதரப்பினரும் சமாதானம் அடைந்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட வாலிபரை எச்சரித்து சென்றனர். இப்பிரச்னையால் நேற்று ஊட்டியில் சுமார் இரண்டு மணி நேரம் தூய்மை பணி மேற்கொள்ளப்படவில்லை.

Tags :
× RELATED மேட்டுப்பாளையம் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கு மண்டல ஐஜி நேரில் ஆய்வு