×

குடந்தை நகர பகுதியில் குடிநீருக்காக குழாய்கள் பதிப்பதால் குண்டும் குழியுமாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் அவதி

கும்பகோணம், மே 10: கும்பகோணம் நகராட்சி சார்பில் குடிநீருக்காக குழாய்கள் பதிக்கும் நடக்கிறது. இப்பணி முழுமை பெறாததால் பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். கும்பகோணம் நகரத்தின் 45 வார்டுகளில் 2.50 லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். பொதுமக்களுக்காக குடிதாங்கி கொள்ளிடம் ஆற்றில் நீர் உறிஞ்சப்பட்டு பெரிய கிணறுகளில் இருந்து குழாய்கள் மூலம் கும்பகோணம் நகரத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் ஏற்றப்பட்டு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இத்தகைய குடிநீர் பணிகளுக்கு பூமிக்கடியில் குழாய்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்டது. தண்ணீரின் அழுத்தம் அதிகமாக இருக்கும்போது பைப்புகளில் அடிக்கடி கசிவு மற்றும் சேதம் ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. இதனால் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து மத்திய அரசின் அடல் மற்றும் அம்ரூத் திட்டத்தின்கீழ் சாலையை தோண்டி அலாய் பைப்புகளை பூமிக்கடியில் புதைக்கும் பணிகள் கடந்தாண்டு  ஆகஸ்ட் மாதம் துவங்கி நடந்து வருகிறது. ரூ.44.24 கோடி மதிப்பில் அனைத்து பகுதிகளுக்கும் சீரான அழுத்தத்துடன் குடிநீர் விநியோகம் வழங்க தற்போதுள்ள பகிர்மான குழாய்களில் 54.30 கிலோ மீட்டர் நீளமும், விடுபட்ட பகுதிகளில் புதிதாக 9.70 கி.மீ நீளமும் குழாய்கள் அமைக்கப்படுகிறது. இத்திட்டம் செயல்படுத்திய பிறகு ஒரு நபருக்கு 135 லிட்டர் வீதம் தினமும் குடிநீர் வழங்கப்படும். அப்போது குடிநீர் பயன்பாட்டை கணக்கிடும் வகையில் அனைத்து வீடுகளிலும் மீட்டர் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது. இத்திட்டம் 45 வார்டுகளிலும் வரும் ஆகஸ்ட் மாதம் முழுமை அடைந்து பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி ஓராண்டுக்குள் பணிகள் முடிக்க வேண்டும். ஆனால் 10  மாதங்களான நிலையில் 30 சதவீத பணிகள் கூட இன்னும் முடியவில்லை. மேலும் பணிகள் முழுமையாக முடியாததால் அனைத்து சாலைகளும் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தினம்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர்.குழாய் பதிக்க தோண்டப்படும் சாலைகள் உடனுக்குடன் சீரமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதுபோல சீரமைக்காமல் சாலைகள் முழுவதும் ஜல்லி கற்கள் சிதறி கிடக்கின்றன. குறிப்பாக பீமன் தெரு, காளியம்மன் கோவில் தெரு, பழைய பேருந்து நிலையம், நகர் காலனி, காந்தி நகர், பாணாதுறை, உழவர் சந்தை சாலைகளில் குழாய் பதித்த இடங்களில்  உள்ள சாலைகள் கரடுமுரடாக ஆபத்தான வகையில் உள்ளது. எனவே கும்பகோணம் நகராட்சி உடனடியாக ஆபத்தான நிலையில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், அம்ரூட் திட்டத்தின்கீழ் பல கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி, பாதாள சாக்கடை அமைக்கும் பணி புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணி 12 மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இப்பணி முடிவதற்கு மேலும் சில மாதமாகும். குழாய் பதிக்கும் பணி முழுவதும் முடிந்த பிறகு தான் கும்பகோணம் நகர பகுதியில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும் என்றார்.

Tags : road motorists ,city ,Kudan ,
× RELATED சினிமா ஸ்டண்ட் நடிகர் வீட்டில் திருட்டு