×

புயல் தாக்கி 165 நாட்களுக்கு மேலாகியும் மீனவர்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை படகுகள் இல்லாமல் வெறிச்சோடிய மீன்பிடி துறைமுகம்

சேதுபாவாசத்திரம், மே 10: கஜா புயல் தாக்கி 165 நாட்களுக்கு மேலாகியும் மீனவர்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. படகுகளின்றி மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. கஜா புயல் கடந்தாண்டு நவம்பர் 16ம் தேதி அதிகாலை கரையை கடந்தது. புயலின் கோரத்தாண்டவத்தால் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதில் விவசாயி, மீனவர், கூலி தொழிலாளி என அனைவருடைய வாழ்க்கையும் கேள்விக்குறியாகியுள்ளது. 20,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த 1.50 லட்சம் தென்னை மரங்கள், 3000க்கும் மேற்பட்ட கூரை மற்றும் ஓட்டு வீடுகள், 246 விசைப்படகுகள், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்களையும் பதம் பார்த்தது.

தஞ்சை, நாகை, திருவாரூர், புதுகை ஆகிய 4 மாவட்டங்களில் 1,595 விசைப்படகுகளில் 188 படகுகள் முழு சேதமும், 1,407 படகுகள் பகுதி சேதமும் அடைந்தது. முழு சேதமடைந்த 188 படகுகளும் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் பகுதிகளை சேர்ந்தவையாகும். முழுமையாக சேதமடைந்த படகுக்கு ரூ.5 லட்சம், பகுதி சேதமடைந்த படகுக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தை தமிழக அரசு அறிவித்தது. 2 மாதங்களுக்கு முன் பகுதி சேதமடைந்த படகுகளுக்கு ரூ.3 லட்சத்தை அவரவர் வங்கி கணக்கில் அரசு வழங்கிவிட்டது.

முழு சேதமடைந்த படகுகளுக்கு அரசு அறிவித்த நிவாரண தொகை போதுமானதாக இல்லையென கூறி விசைப்படகு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் நிவாரணம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. நிவாரணம் உயர்த்தி வழங்குவதற்காக தான் காலதாமதம் செய்யப்படுகிறது என மீனவர்கள் எண்ணியிருந்த நிலையில் திடீரென 2 மாதங்களுக்கு முன் சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்த 54 விசைப்படகுகளுக்கு ரூ.5 லட்சம் வீதம் வங்கி கணக்கில் நிவாரணத்தொகை வழங்கப்பட்டது.

ஆனால் மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் பகுதிகளில் உள்ள 134 படகுகளுக்கு 165 நாட்களை கடந்தும் இன்று வரை நிவாரணம் வழங்கவில்லை. தற்போது தடைகாலம் நடைமுறையில் உள்ளது. தடைகாலம் முடிந்துகூட மீனவர்கள் கடலுக்கு செல்ல படகு தயார் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் படகுகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இதுகுறித்து விசைப்படகு மீனவர் பேரவை மாநில செயலாளர் தாஜூதீன் கூறும்போது: 2004ம் ஆண்டு அரசாணையின்படி ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பைபர் கிளாஸ் படகு வாங்குவதற்கு கூட ரூ.7.50 லட்சம் தேவைப்படுகிறது. ஆனால் அரசு அறிவித்துள்ள நிவாரணம் ரூ.5 லட்சத்தில் பழைய படகுகூட வாங்க முடியாது. இதனால் தான் நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டுமென போராடி வந்தோம். அரசு பரிசீலிப்பதாக கூறி விட்டு திடீரென சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 54 படகுகளுக்கு மட்டும்  கடந்த 2 மாதங்களுக்கு முன் ரூ.5 லட்சம் நிவாரண தொகையை வங்கி கணக்கில் செலுத்தியுள்ளது.

மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் பகுதியில் சேதமடைந்த 134 படகுகளுக்கு 165 நாட்களை கடந்தும் அந்த தொகை கூட வழங்கவில்லை. தடைகாலம் முடிந்தும் கடலுக்கு செல்வோமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. கடந்தாண்டு ஒகி புயலின்போது கேரள மாநில அரசு மீனவர்களின் வாழ்வாதாரத்தை எண்ணி சேதமடைந்த படகுகளுக்கு பதிலாக புதிய படகுகளை வழங்கியுள்ளது. அதேபோல் மத்திய, மாநில அரசுகள் புதிய படகுகள் வழங்காவிட்டாலும் பழைய படகுகள் வாங்கி கொள்ளும் அளவுக்கு நிவாரணத்தை உயர்த்தி ரூ.10 லட்சமாக வழங்க வேண்டும். படகுகள் இல்லாத துறைமுகத்தை பார்க்கவே மனமில்லாமல் மீனவர்கள் கலங்கிபோய் உள்ளனர் என்றார்.

Tags : fisherman ,
× RELATED திருவனந்தபுரம் தொகுதியில் மீனவர்கள்...