விருத்தாசலம் அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டு முன் காதலி தர்ணாவிருத்தாசலம், மே 10: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மருங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மருதமுத்து மகள் அர்ச்சனா(25). இவர் விருத்தாசலம் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். அருகே உள்ள காவனூர் கிராமத்தை சேர்ந்த தங்கசாமி மகன் கோவிந்தராஜ்(29). இவர் சி.கீரனூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக  பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் அர்ச்சனாவும், கோவிந்தராஜூம் கடந்த இரண்டு வருடங்களாக ஒருவரை  ஒருவர் காதலித்து வந்தனர். கடந்த 22ம் தேதி இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஆண்டிமடம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, அர்ச்சனாவின் புடவை இருசக்கர  வாகனத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது. இதில் அர்ச்சனாவுக்கு தலை மற்றும் முகம்  பகுதியில் பலத்த காயம்  ஏற்பட்டது. தொடர்ந்து அர்ச்சனாவை விருத்தாசலம் தனியார்  மருத்துவமனையில் காண்பித்து பின்பு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். சிகிச்சை முடிந்து கடந்த 3 நாட்களுக்கு முன் அர்ச்சனா வீடு திரும்பினார்.

இந்நிலையில் கோவிந்தராஜை காதலித்த விவகாரம், விபத்து நடந்த நிகழ்வு உள்ளிட்ட அனைத்தையும் பெற்றோரிடம் அர்ச்சனா தெரிவித்துள்ளார். இதையடுத்து அர்ச்சனா கோவிந்தராஜிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார்.
 அதற்கு கோவிந்தராஜ், விபத்து ஏற்பட்ட பின்பு உனது முகம் சிதைந்து பற்கள் உடைந்து விட்டது. உன்னை பார்க்கவே  பிடிக்கவில்லை. நானோ அரசு வேலையில் உள்ளேன். எனக்கு  பெண் கொடுக்க ஆயிரம் பேர் முன் வருவார்கள் என கூறி அர்ச்சனாவை தட்டி கழித்துள்ளார். அதனை தொடர்ந்து, நேற்று  அர்ச்சனா கோவிந்தராஜின் வீட்டிற்கு சென்று அவரின் பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். ஆனால் அவர்களும் அர்ச்சனாவை ஏற்க மறுத்துள்ளனர். இதனால் கோவிந்தராஜின் வீட்டின் வாசலில் உட்கார்ந்து அர்ச்சனா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

 இதனால் வீட்டை பூட்டிவிட்டு கோவிந்தராஜூடன் வெளியே சென்றுவிட்டனர். இருப்பினும் தனக்கு நீதி கிடைக்கும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திருக்க மாட்டேன் என கூறி அர்ச்சனா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.இதுகுறித்து தகவலறிந்து வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் அர்ச்சனாவிடம் சமாதானம் பேசியும் சமாதானம் ஆகாமல் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Dharna ,government school teacher ,Vriddhachalam ,
× RELATED திருப்பதி தேவஸ்தான டிவி அலுவலகத்தில்...