×

நடத்தையில் சந்தேகப்பட்டதால் ரவுடியுடன் சேர்ந்து கணவனை கொன்றேன் கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம்

புதுச்சேரி, மே 10:  புதுவையில் ரவுடியுடன் சேர்ந்து கணவரை கொன்று நாடகமாடியது தொடர்பாக இவ்வழக்கில் கைதான அவரது மனைவி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். புதுவை, நெல்லித்தோப்பு, கஸ்தூரிபாய் நகரில் வசித்தவர் கமலக்
கண்ணன் (35). லாரி டிரைவரான இவர் 100 அடி ஆர்டிஓ ஆபீஸ் அருகே சில தினங்களுக்கு முன்பு சாக்குமூட்டையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை மீட்டு முதலியார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் பூச்சிமருந்து கலந்திருப்பதும், மூச்சு அடைப்பு இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கமலக்கண்ணனின் வீட்டிற்கு போலீசார் சென்ற நிலையில் அது பூட்டிக் கிடந்தது. இதையடுத்து பிள்ளைச்சாவடியில் உள்ள அவரது மனைவி ஸ்டெல்லாவிடம் தனிப்படை நேரில் சென்று கணவர் இறந்த தகவலை தெரிவித்தபோது அவர் அழுதுள்ளார். பின்னர் அவரை வீட்டிற்கு அழைத்து வந்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரிக்கையில், கடந்த சனிக்கிழமை கணவரை ஸ்டெல்லா கைத்தாங்கலாக  வீட்டிற்குள் அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் தனிப்படை அதிரடியாக விசாரணையில் இறங்கியது. அப்போது பல ஆண்களுடன் பழகியதை கமலக்கண்ணன் சந்தேகித்து கொடுமைப்படுத்தவே அவரை மனைவியே கொலை செய்து நாடகமாடியதும், இதற்கு அவரது சகோதரி ரெஜினா மற்றும் ரவுடி தமிழ்மணி உள்ளிட்ட சிலர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

 இதையடுத்து கமலக்கண்ணன் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார் ஸ்டெல்லாவை உடனே கைது செய்தனர். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து தனிப்படை நடத்திய விசாரணையில் பகீர் திருப்பம் ஏற்பட்டது. போதையில் வீட்டிற்கு வந்த கணவனை மனைவி பிடித்து கீழே தள்ளிவிட்டதில் தலையில் அடிபட்டு இறந்திருக்கலாம் என முதலில் தகவல் வெளியான நிலையில், தனது நடத்தையில் சந்தேகம் அடைந்து சமீபகாலமாக தன்னை துன்புறுத்திய கமலக்கண்ணனை கொலை செய்ய திட்டமிட்டு அவரை கடந்த 4ம்தேதி பிள்ளைச்சாவடிக்கு ஸ்டெல்லா அழைத்துச் சென்றது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  இதுதொடர்பாக போலீசில் ஸ்டெல்லா அளித்த பரபரப்பு வாக்குமூலம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- செஞ்சியைச் சேர்ந்த எனது கணவர் கமலக்கண்ணன் லாரி ஓட்டி வந்தார். எங்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அடிக்கடி எனது கணவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்வார். எனது பழக்கடைக்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்களிடம் நான் நட்பாக பழகி வந்தேன். இதனை என் கணவர் சந்தேகத்துடன் பார்த்து வந்தார். இதனால் எங்களுக்குள் நாள்தோறும் தகராறு ஏற்பட்டது. கடந்த ஓராண்டாக நாங்கள் தம்பதியாக வாழாமல், இருவேறு துருவங்களாக வசித்தோம். இதனால் என்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டினார். இதனால் நானே அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். இதுகுறித்து பிள்ளைச்சாவடியில் வசிக்கும் எனது அக்காள் ரெஜினாவிடம் தெரிவித்தேன். ரெஜினா கணவரை பிரிந்து தற்போது ரவுடி தமிழ்மணியுடன் தொடர்பில் இருந்தார். இதனால் தமிழ்மணியின் துணையுடன் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினோம். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை என் கணவரும் நானும், குழந்தைகளுடன் ரெஜினா வீட்டிற்கு சென்றோம். அங்கும் அவர் என்னிடம் தகராறில் ஈடுபட்டார்.

அப்போது நாங்கள் பழச்சாற்றில் பூச்சிமருந்து கலந்து குடிக்க கொடுத்தோம். இதில் மயங்கிய அவரை தமிழ்மணி உதவியுடன் ஆட்டோவில் ஏற்றி கஸ்தூரிபாய் நகருக்கு வந்தோம். மயக்கமடைந்த நிலையில் இருந்த கமலக்கண்ணனை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றோம். அங்கு படுக்கை அறையில் அவரை வைத்து பூட்டிவிட்டு மீண்டும் எல்லைப் பிள்ளைச்சாவடிக்கு வந்தோம். இங்கு வந்த பிறகுதான் அவர் பிழைத்துவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் மனதில் ஓடியது. இதனால் மறுதினம் தமிழ்மணியும், நானும் கஸ்தூரிபாய் நகருக்கு சென்றோம். அங்கு நான் கைகால்களை பிடித்துக் கொள்ள தமிழ்மணி எனது கணவர் வாய், மூக்கை துணியால் அழுத்தினார். இதில் மூச்சுத்திணறி கமலக்கண்ணன் இறந்துவிட்டார். பின்னர் அங்கிருந்து கணவரின் உடலை எப்படி அப்புறப்படுத்துவது என யோசித்தோம். தமிழ்மணி தனது நண்பர்களுடன் உடலை அப்புறப்படுத்தி விடுவதாக உறுதியளித்தார். உடனே நான் பழங்களை விற்கும் சாக்குப்பை கொண்டு வந்தேன். அதில் சடலத்தை வைத்தோம். உள்ளே நுழையவில்லை என்பதால் கழுத்தை உடைத்து உள்ளே திணித்தோம்.பிறகு நானும், தமிழ்மணியும் எல்லப்பிள்ளைச்சாவடிக்கு வந்துவிட்டோம். அன்றிரவு தமிழ்மணி தனது மோட்டார் சைக்கிளில் நண்பர் உதவியுடன் சாக்குப்பையை எடுத்து சென்று 100 அடி ரோட்டில் உள்ள தாசில்தார் அலுவலகம் அருகே போட்டுவிட்டு வந்துவிட்டார். மறுநாள் சடலம் இருப்பதை போலீசார் பார்வையிட்டபோது நானும், பொதுமக்களுடன் ஒருவராக நின்று பார்த்தேன். தமிழ்மணியை பெரிய வாய்க்கால் எதிலாவது போடச் சொன்னால், இப்படி போட்டுவிட்டாரே என்று ஆத்திரம் ஏற்பட்டது.இதுகுறித்து தமிழ்மணியிடம் நான் கேட்டபோது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது தமிழ்மணி, என்னிடம் கொலை செய்ததற்கு பணம் கேட்டார்.

நான் என் நகையை அடகு வைத்து ரூ.7 ஆயிரத்தை கொடுத்தேன். போலீசார் கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைத்தேன். ஆனால் போலீசாரின் துரிதமான விசாரணையால் நான் சிக்கிக் கொண்டேன். இவ்வாறு பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.¬¬¬  கொலைக்கான தடயங்கள் சிக்கிய நிலையில், ஸ்டெல்லாவை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய பூச்சி மருந்து பாக்கெட், துணி, கொலை நடந்த இடத்தில் பதிவான ரத்தக்கறை தடயங்கள், கொலைக்கு உதவிய ரவுடிக்கு கொடுக்க நகை அடகு வைக்கப்பட்ட சீட்டு உள்ளிட்ட ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள ரவுடி தமிழ்மணி, உறவினர் ரெஜினா உள்ளிட்ட 3 பேரை தனிப்படை வலைவீசி தேடி வருகிறது. அவர்கள் கோர்ட்டில் சரணடைய திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்த நிலையில் அங்கும் மப்டி உடைகளில் தனிப்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

Tags : Rowdy ,murder ,
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...