×

பண்ருட்டி ரயில்வே கேட் மூடியதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

பண்ருட்டி, மே 10: பண்ருட்டி- கும்பகோணம் சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டியதால், இதுவரை செயல்பட்டு வந்த ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடியதால் அதிருப்தியடைந்த மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பண்ருட்டி- கும்பகோணம் சாலையில் கடந்த 1980ம் ஆண்டுக்கு முன் ரயில் பாதை அமைக்கப்பட்ட நாளில் இருந்து ரயில்வே கேட் செயல்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் ஆளில்லா ரயில்வே கேட்டாக இருந்தது. பின்னர் சென்னை சாலை போக்குவரத்து அதிகரித்ததால் கேட் கீப்பரை நியமித்து ரயில்வே கேட் நிர்வகிக்கப்பட்டது. இந்த ரயில்வே கேட் வழியாக பல்வேறு தேசிய மற்றும் தமிழக அரசியல் முக்கிய தலைவர்கள் காரில் சென்றுள்ளனர்.தமிழகம் முழுவதும் உள்ள வியாபாரிகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் பண்ருட்டி ரயில்வே கேட் லேண்ட் மார்க்கமாகவே இருந்தது. நெய்வேலி கனரக வாகனங்கள் அனைத்தும் இந்த ரயில்வே கேட் வழியாகத்தான் சென்று வந்தது. இந்நிலையில் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை அறிவிப்புக்கு பின்னால் இந்த சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகவும் அதிகளவு இலகு மற்றும் கனரக வாகனங்கள் செல்லும் முக்கிய சாலையாக மாறியது.

இதேபோல் பொதுமக்களின் நலன் கருதி புதிய ரயில்களும் இயக்கப்பட்டன. இதனால் அவ்வப்போது இந்த ரயில்வே கேட் 24 மணி நேரத்தில் அடிக்கடி மூடி திறக்கப்பட்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலையின் இருபக்கமும் வெகுதூரம் வாகனங்கள் நின்று அவதிப்படும் நிலை உருவானது. இதனையடுத்து புதிதாக ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக மத்திய ரயில்வே துறையும், மாநில அரசும் இணைந்து முடிவெடுத்து மேம்பாலம் கட்டப்பட்டது.இதன் காரணமாக ரயில்வே துறையினர் பாலம் பணிகள் முடிந்துவிட்டதால் ரயில்வே கேட்டை மூட முடிவெடுத்தனர். கடந்த சில தினங்களாக இத்தகவல் பரவி வந்தது. இந்நிலையில் நேற்று ரயில்வே ஊழியர்கள் திடீரென ரயில்வே கேட்டை இழுத்து மூடினர். தகவலறிந்த ரயில் பயணிகள் சங்க தலைவர் சண்முகம், திமுக மாவட்ட துணை செயலாளர் தணிகைசெல்வம், காங்கிரஸ் நகர தலைவர் முருகன், திருவள்ளுவர் நகர் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ரயில்வே ஊழியர்களிடம் கேட்டை மூடக்கூடாது என கூறி போராட்டம் செய்தனர்.இச்சம்பவத்தால் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றன. தகவலறிந்த டிஎஸ்பி நாகராஜன், இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஓரிரு நாளில் மாவட்ட ஆட்சியர், ரயில்வே பொது மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்து அனுமதி பெறவேண்டும். இதன் பின்னரே ரயில்வே கேட் திறக்கப்படும். இல்லையென்றால் நிரந்தரமாக மூடப்படும் என கூறப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் அதுவரை கேட்டை திறந்து வைக்குமாறு கேட்டனர்.
இதனை ஏற்றுக்கொண்டு கேட்டை திறந்தனர். இச்சம்பவம் பண்ருட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : strike ,Panthuti Railway ,
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து