×

கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை

கெங்கவல்லி, மே 10:  கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது. சூறைக்காற்றுடன் பெய்த மழையால் 300க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தது.தமிழகத்தில் பிப்ரவரி மாதம் முதலே கோடை வெயில் வாட்டி வந்தது. கடந்த வாரம் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்வதற்கே பயந்தனர். இந்நிலையில், சேலம் மாவட்டம், கெங்கவல்லி அடுத்த வீரகனூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த சூறைகாற்றுடன் மழை பெய்தது. இதில், வீரகனூர் அருகே உள்ள பகடப்பாடி, வெள்ளையூர் கிராமத்தில் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

வீரகனூர் பகுதியில் பெய்த மழையால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கெங்கவல்லியில் 47 மிமீ மழை பதிவாகியுள்ளது. வீரகனூரை அடுத்த நல்லூரை சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன்(42). இவரது வீட்டில் கால்நடைகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் பெய்த மழையினால் வீட்டின் அருகே இருந்த பனைமரம் விழுந்ததில் அவரது பசுமாடு உயிரிழந்தது. இதேபோல், லத்துவாடி பகுதியிலும் விவசாயிகளிம் தோப்புகளில் பயிரிடப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட வாழைமரங்கள் அடியோடு சாய்ந்தது. இதுகுறித்து வீரகனூர் ஆர்ஐ சங்கரி மற்றும் விஏஓ கலியமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சேதம் குறித்து ஆய்வு செய்தனர். இதேபோல், இடைப்பாடி, கொங்கணாபுரம், ரங்கம்பாளையம், மூலப்பாதை, கல்லுக்கடை, வெள்ளரி வெள்ளி, வெள்ளாண்டிவலசு, குள்ளம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதில், பல்வேறு இடங்களில் பனைமரம், வாழைமரம், இளவஞ்சி, பப்பாளி உள்ளிட்ட மரங்கள்  சூறைக்காற்றுக்கு சாய்ந்தது. 

Tags : Kangavalli ,areas ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...