×

விளையாட்டு விடுதியில் சேர மாணவர்களுக்கு ஆர்வம் இல்லாததால் மைதானம் வெறிச்சோடியது

ஈரோடு, மே 10:  ஈரோட்டில் விளையாட்டு விடுதிகளில் சேர மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் நேற்று நடந்தது. இதில், மாணவர்களுக்கு போதிய ஆர்வம் இல்லாததால் மைதானம் வெறிச்சோடியது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஈரோடு மாவட்ட விளையாட்டு பிரிவில் சாதனை புரியும் மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டு விடுதிகள் உள்ளது. மாணவர்களுக்கான விடுதிகள் மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி, நாமக்கல் ஆகிய இடங்களிலும், மாணவியருக்கான விளையாட்டு விடுதிகள் ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், தி்ண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தர்மபுரி, சென்னை, நாமக்கல் ஆகிய இடங்களிலும் செயல்பட்டு வருகிறது. இந்த விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்குவதற்கான மாணவர் சேர்க்கை தேர்வு நேற்று ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

இதில் 7, 8, 9 மற்றும் 11ம்வகுப்பு மாணவ, மாணவியர் கலந்து கொள்ளலாம் என்றும், 20 விதமான போட்டிகள் நடத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று நடந்த மாணவர் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வில் 109 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். குறைந்த அளவிலேயே மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டதால் 20 விதமான போட்டிகளில் வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், வளைகோல்பந்து, பளுதூக்குதல், மேஜைப்பந்து, டென்னீஸ், ஜூடோ, ஸ்குவாஷ் ஆகிய 8 போட்டிகளில் யாருமே கலந்து கொள்ளவில்லை. இதனால், மைதானம் வெறிச்சோடி காணப்பட்டது. விளையாட்டு துறைக்கு அரசு சார்பில் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு வரும் நிலையில் விளையாட்டில் ஆர்வம் ஏற்படுத்த விளையாட்டு துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும் போட்டிகள் தொடர்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்லை.

இதனால், போட்டி நடந்தாலும், தேர்வு போட்டிகள் நடத்தப்பட்டாலும் கலந்து கொள்ள மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக கிராமப்புறங்களில் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி இதுபோன்ற போட்டிகளுக்கு விளையாட்டு துறையினர் அழைத்து வர வேண்டும். அப்போது தான் பல விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை உருவாக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : stadium ,hotel ,
× RELATED அணியின் நலனுக்காக புதிய...