×

மணிக்கு 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் தென் தமிழக கடற்கரை பகுதிகளில் இன்று பேரலைகளுக்கு வாய்ப்பு: கடல் தகவல் மையம் எச்சரிக்கை

நாகர்கோவில், மே 10: குமரி மாவட்டம் உள்பட தென் தமிழக கடற்கரை பகுதிகளில் இன்று பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குமரி மாவட்ட கடலோர பகுதிகளில் ஏப்ரல், மே மாதங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுவது வழக்கம். தாழ்வான கடற்கரை பகுதிகளில் கடல்நீர் உட்புகுவதும், கடலரிப்பு தடுப்பு சுவர்கள் சேதமடைவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் இன்றும் கடற்கரை பகுதிகளில் பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் ‘தென் தமிழக கடல் பகுதிகளில் குளச்சல், முட்டம், குலசேகரபட்டினம், தூத்துக்குடி மற்றும் அருகில் உள்ள கடற்கரை பகுதிகளில் இன்று (10ம் தேதி) 15 முதல் 19 நொடிநேரம் நீளுகின்ற கடல் அலைகளுக்கு வாய்ப்பு உள்ளது.

ஒன்றரை முதல் 2 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும். தென் மேற்கு திசையில் இருந்து பலத்த கடற்காற்று வீசும். இதன் வேகம் மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும், சில வேளையில் 50 முதல் 55 கி.மீ வேகத்திலும் இருக்கும். தமிழக, கேரளா, கர்நாடக மற்றும் லட்சத்தீவு கடற்கரை சார்ந்த பகுதிகளில் சுற்றுலா செல்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும், மீன்பிடி தொழிலாளிகள், கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்றும் இந்திய கடல் தகவல் சேவை மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...