×

பசுமை குடில்களில் வெள்ளரிக்காய்-தக்காளி பயிரிட இளைஞர்கள் முன்வர வேண்டும் புதுச்சேரி வேளாண் அமைச்சர் அறிவுறுத்தல்

காரைக்கால், மே 10: பசுமை குடில்களில் வெள்ளரிக்காய்-தக்காளி பயிரிட இளைஞர்கள் முன்வர வேண்டும் என புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் அறிவுறுத்தியுள்ளார். தமிழகப் பகுதியான திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியில் அமைந்திருக்கும் இந்திய இஸ்ரேல் வேளாண் தொழில் நுட்ப மையத்தை, புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் நேற்று முன்தினம் பார்வையிட்டார். அங்கு  விவசாயிகளுக்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய வேளாண்மை குறித்த பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுவதையும், இந்த தொழில்நுட்ப மையத்தின் மூலம் விவசாயிகளுக்கு சுமார் 1.5 கோடி காய்கறிகள் நாற்றுகள் வழங்கப்படுவதையும், அந்த நிறுவனத்தின் முதல்வர் மற்றும் அதிகாரிகள் அமைச்சர் இடத்தில் விரிவாக எடுத்துரைத்தனர்.

மேலும் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய தானியங்கி விதை இடும் கருவி, நீர் பாய்ச்சும் முறைகள் உள்ளிட்டவற்றையும் பார்வையிட்ட அமைச்சர் இந்த நிறுவனத்தின் மூலம் பயிற்சிகள் மற்றும் கடனுதவி பெற்று பசுமை குடில்களில் வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ள விவசாயி முத்துலட்சுமி, கார்த்தி இருவரிடமும் கலந்துரையாடிய அமைச்சர் பின்னர் அவர்களது பசுமைக்குடிலை பார்வையிட்டார். இதுகுறித்து அமைச்சர் கமலக்கண்ணன் நேற்று காரைக்காலில் கூறியதாவது: திண்டுக்கல்லில் பசுமை குடில்களில் விவசாயம் செய்து வரும் விவசாயி கார்த்திக் என்பவர் பி.இ படித்த பட்டதாரி, அவர் இவ்வகையான நவீன தொழில் நுட்பங்களை அரசின் உதவிபெற்று அதில் வெற்றியும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படித்த இளைஞர்கள் ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை கிடைக்குமா? என்று தேடிவரும் நிலையில் அரசின் உதவி பெற்று விவசாயத்தில் வெற்றி அடைந்துள்ள கார்த்தியைபோல், வாய்ப்பும் ஆர்வமும் உள்ள புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள்  பசுமைக்குடில் விவசாயத்தை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்றார்.

Tags : greenhouses ,Minister of Agriculture ,Puducherry ,
× RELATED தென்னை பயிரிடும் விவசாயிகளின் நலனை...