×

நாகர்கோவில் நகர பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

நாகர்கோவில், மே 10: நாகர்கோவில் நகர பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடியை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியினர் எஸ்பியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
 நாகர்கோவில் நகர பகுதியில் காலை, மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கோடை விடுமுறை காலம் என்பதாலும், தற்போது அவ்வைசண்முகம் சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும் நகர்புற சாலைகளில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை சரி செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலதரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் மோகன் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் உசேன், அந்தோணி, நிர்வாகிகள் ராஜநாயகம், அனிஷ், பழனிசாமி, மரியஸ்டீபன் உள்ளிட்டோர் நேற்று எஸ்பியிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், நாகர்கோவில் நகர பகுதியில் பல மாதங்களாக கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் நகரின் முக்கிய சந்திப்பு பகுதிகளில் போக்குவரத்து போலீசார் எந்த பணியும் மேற்கொள்வதில்லை. இதனால் பைக், காரில் செல்பவர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.தற்போது அவ்வைசண்முகம் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் நடப்பதால் ஒரு வழிப்பாதைகள் எல்லாம் இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் அகலம் குறைவான இந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது. எனவே நாகர்கோவிலில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தெடர்பாக ஆலோசனை நடத்த ஒரு ஆய்வு கூட்டம் கூட்ட வேண்டும்.

இதில் அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து பேசி உரிய தீர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட எஸ்பி நாத்திடம் கேட்டபோது, நாகர்கோவில் அவ்வைசண்முகம் சாலையில் பாதாள சாக்கடை பணி தொடங்கப்பட்டுள்ளதால் அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் நகரின் பிற பகுதிகளில் வாகன நெருக்கடி ஏற்படுகிறது. நெரிசல் ஏற்படும் வகையில் வாகனங்களை இயக்குபவர்கள், போக்குவரத்து விதிகளை மீறி செல்பவர்கள், ஒரு வழிப்பாதையில் செல்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : town ,Nagarcoil ,
× RELATED பொறுப்பேற்பு