×

தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு கழிவுநீரோடை அடைப்புகள் சரிசெய்யும் பணி தீவிரம்: நாகர்கோவில் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

நாகர்கோவில், மே 10:  தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகர்கோவில் மாநகராட்சி முழுவதும் உள்ள கழிவுநீரோடைகளில் உள்ள அடைப்புகளை சரிசெய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் 52 வார்டுகள் உள்ளன. இந்த மாநகராட்சி பகுதியில் சிறிய மழை பெய்தாலே கழிவுநீரோடைகளில் உள்ள தண்ணீர் சாலைகளில் பாய்ந்து ஓடுகிறது. அந்த அளவிற்கு கழிவுநீரோடைகள் ஆக்கிரமிப்பின் பிடியிலும், அடைப்புகளாலும் பாதிக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது மாநகராட்சி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும், இந்த நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.
பொதுமக்கள் குப்பைகளை கழிவுநீரோடைகளில் போடுவதால், அடைப்புகள் ஏற்படுகிறது என மாநகராட்சி தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர். இருப்பினும் பொதுமக்கள் சிலர் கண்டுகொள்ளாமல், கழிவுநீரோடைகளில் குப்பைகளை போடுகின்றனர். இன்னும் சில நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மழை பெய்யும் போது மழை நீருடன் கழிவுநீரும் சேர்ந்து சாலையில் ஓடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவின்பேரில் நகர்நல அதிகாரி டாக்டர் கிங்சால் மேற்பார்வையில் அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் கழிவு
நீரோடைகளில் குப்பை மற்றும் மண்ணால் ஆன அடைப்புகளை சரிசெய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து நகர்நல அதிகாரி டாக்டர் கிங்சால் கூறியதாவது: ஆணையர் சரவணகுமார் உத்தரவின் பேரில் பருவமழை தொடங்குவதற்கு முன்பு கழிவுநீரோடைகளில் உள்ள அடைப்புகளை சரிசெய்யும் பணியை மேற்கொண்டு வருகிறோம். சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் 100 துப்புரவு பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். துப்புரவு பணியாளர்களை கொண்டு அடைப்புகளை சரிசெய்ய முடியாத இடங்களில் பொக்லைன் இயந்திரம் கொண்டு சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. ெபாதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கழிவுநீரோடைகளையும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களை கொண்டு சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. பருவமழை தொடங்கிய பிறகு தண்ணீர் கழிவு நீரோடையில் தடையின்றி செல்லும் வகையில் பணி நடந்து வருகின்றது என்றார்.

Tags : Nagercoil Municipal Action Action ,
× RELATED விஜய்வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன்,...