×

வத்திராயிருப்பு காசி விசாலாட்சி அம்மன் கோயிலில் மழை வேண்டி நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை

வத்திராயிருப்பு, மே  10: வத்திராயிருப்பு காசி விசாலாட்சி அம்மன் கோயிலில் மழை பெய்ய வேண்டி நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வத்திராயிருப்பு பகுதியில் கடந்த பல நாட்களாக வெயில் கொளுத்தி வந்தது. அதோடு பருவமழை, புயல்மழை உள்ளிட்ட எந்த மழையும் சாிவரப் பெய்யவில்லை. இதனால் பிளவக்கல் கோவிலாறு அணை மற்றும் 50க்கும் மேற்பட்ட கண்மாய்கள் வறண்ட நிலையில் உள்ளன. அதோடு வத்திராயிருப்பு ஒன்றியத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடும் வறட்சியின் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதோடு, நாளுக்கு நாள் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே செல்கிறது.

கடந்த ஒரு வாரமாக  மழை பெய்வது போல் வானத்தில் கரும்மேகங்கள் சூழ்ந்து காணப்படுவதும், பின்னர் கலைவதுமாக இருந்து வருகிறது. மழை பெய்யாமல் பொய்த்து வருவதை அடுத்து நேற்று வத்திராயிருப்பு காசி விசாலாட்சி அம்மன் கோயிலில் காலை 8 மணி முதல் 11 மணிவரை யாகசாலை மற்றும் நந்தீஸ்வரருக்கு பால், பழம், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 11 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. அதோடு காசிவிஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களுக்கும் பூஜைகள் நடைபெற்றன. கூடியிருந்த பக்தர்கள் பயபக்தியுடன் மழை பெய்யவேண்டி பஜனைப்பாடல்கள் பாடினர். இந்நிகழ்ச்சியில் கோவில்  செயல் அலுவலர் சுந்தரராசு, கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம் மற்றும் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Nandiswara ,Kasi Visalakshi Amman Temple ,
× RELATED வரதட்சணை கொடுமை 3 பேர் மீது வழக்குப்பதிவு