×

தேனி மாவட்டத்தில் கோரிக்கை இல்லாமலே இரு வாக்குச்சாவடிகளுக்கு மறுதேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு வந்ததை மறைக்க நடத்தப்படும் நாடகமா?

தேனி, மே 10: தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிகளில் இரு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டுமென்ற கோரிகக்கை இல்லாத நிலையில், தேர்தல் ஆணையம் மறுவாக்குப்பதிவு நடத்தும் அறிவிப்பு பொதுமக்களிடையே குழப்பநிலையை உருவாக்கி உள்ளது. தேனி மக்களவை தொகுதியில் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம், உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. தேனி மக்களவை தொகுதி மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப். 18ம் தேதி நடந்தது. இதில் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாலசமுத்திரம் கிராமத்தில் வாக்குச்சாவடி எண் 67க்கும், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் வடுகபட்டி கிராமத்தில் வாக்குச்சாவடி எண் 197 க்கும் மறுவாக்குப்பதிவு மே 19ம்தேதி நடக்கும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கோரிக்கையே இல்லாத நிலையில் தேர்தல் தேனி மாவட்டத்தில் இவ்விரு வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்தச் சொல்லி எந்த ஒரு அரசியல் கட்சியோ, வேட்பாளர்களோ கோரிக்கை வைக்கவில்லை. ஆனால். தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக இவ்விரு வாக்குச்சாவடிகளுக்கும் மறுவாக்குப்பதிவு அறிவித்துள்ளதில் மர்மம் நீடித்து வருகிறது.

50 வாக்குப்பதிவு இயந்திரங்களின் பின்னணி
தேனி தாலுகா அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் மாலை 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ரகசியமாக கொண்டுவரப்பட்டன. இதனையடுத்து ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக ஏற்கனவே, பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை, தேனியில் வாக்கு எண்ணும் மையத்திற்கு நள்ளிரவில் கொண்டு சென்று வைக்க முயற்சிப்பதாக தகவல் பரவியது. இதனையறிந்த திமுக, காங்கிரஸ், அமமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சியினர், ஆளுங்கட்சியினர் தேனி அலுவலகத்தில் குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக கலெக்டர் பல்லவிபல்தேவ் எதிர்கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து, கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் ஒரு ஸ்ட்ராங் அறையில் சீலிடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

பொதுமக்கள் சந்தேகம்
தேனி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட 50 வாக்குப்பதிவு இயந்திரங்களை தேனி கம்மவார் சங்க கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கொண்டு சென்று வைக்க ஆளுங்கட்சி தரப்பினர் திட்டம் தீட்டியதாகவும், இதற்கு தேர்தல் பிரிவினரும் உடந்தையாக இருக்கலாமோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேச்சு எழுந்தது. 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் விஷயம் பரவியதையடுத்து, தேர்தல் ஆணையம் தற்போது தேனி மாவட்டத்தில் அறிவித்துள்ள இரு வாக்குச்சாவடிகளுக்கும் மறுவாக்குப்பதிவு நடத்தவே 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வந்துள்ளதாக மழுப்பலாக தெரிவித்தனர்.
இரு வாக்குச்சாவடிகளுக்கு மட்டும் மறுவாக்குப்பதிவு நடக்கும் நிலையில், ஒரு வாக்குச்சாடிக்கு இரு வாக்குப்பதிவு இயந்திரம் என்ற வகையில் இரு தொகுதிகளுக்கும் சேர்த்து 8 வாக்குப்பதிவு இயந்திரங்களை மட்டுமே அனுப்பினால் போதும் என்ற நிலையில் 50 வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பியது பொதுமக்களிடையே தேர்தல் ஆணையம் மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

அரசியல் கட்சியினர் எதிர்ப்பு
யாரும் கோரிக்கை வைக்காத நிலையில் தேனி மாவட்டத்தில் இரு வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு அறிவித்துள்ளது அரசியல் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நேற்று முன்தினமே தேர்தல் ஆணையருக்கு ஆண்டிபட்டி தொகுதி திமுக வேட்பாளர் மகாராஜனின் தேர்தல் முகவர் ராஜாராம் தேனி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில் மாதிரி வாக்குப்பதிவு முடிந்தபிறகு, வாக்குச்சீட்டை தனியாக வைத்து சீலிட அந்தந்த வேட்பாளர்களின் சார்பில் கலந்து கொண்ட முகவர்களில் யாரும் கோரிக்கை வைக்கவில்லை. இதனால், பொதுமக்கள் மத்தியில் 50 வாக்குப்பதிவு இயந்திரங்களை ரகசியமாக வைக்க எண்ணியது வெளியே தெரிந்து விட்டதால் வேறு வழியில்லாமல் இரு வாக்குச்சாவடிகளுக்காகவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டதாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். யாருமே மறுவாக்குப்பதிவு கேட்காத நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விஷயம் பூதாகரமானதையடுத்து, வேறு வழியில்லாமல் இரு வாக்குச்சர்வடிகளுக்கு மட்டும் மறுவாக்குப்பதிவு என தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மறுவாக்குப்பதிவு என்ற முடிவு எதிர்கட்சியினர் மத்தியில் பெரும் எதிர்ப்பை உருவாக்கி உள்ளது.

Tags : polling stations ,district ,Theni ,
× RELATED நீலகிரியில் 176 பதற்றமான...