×

பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் விழா

ஓட்டப்பிடாரம், மே 10: பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் விழா மற்றும் வீரசக்கதேவி ஆலய 63வது வழிபாட்டு விழாவையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் சித்திரை மாதம் வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவும், வீரசக்கதேவி ஆலய வழிபாட்டு விழாவும் பாஞ்சாலங்குறிச்சியில் இரு நாட்கள் சிறப்பாக நடைபெறும். இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த  கட்டபொம்மன் வம்சாவழியினர் பெருந்திரளாகப் பங்கேற்பர்.

முதல் நாளான வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் காலை வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் நடைபெறும். இதேபோல் கோயிலுக்கு எதிரே உள்ள கோட்டை கருப்பசாமி கோயிலில் கவர்னகிரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வழிபாடு நடத்துவர். பின்னர் 2வது நாளில் நடைபெறும் மாட்டுவண்டி போட்டியை காண ஆயிரக்கணக்கானோர் கூடுவர். இதே போல் கடந்த 2010 ம் ஆண்டில்  நடந்த விழாவின்போது வெளிமாவட்டங்களிலிருந்து கட்டபொம்மன் மற்றும் வீரசக்கதேவி கோயில் விழாவிற்காக நினைவு ஜோதி எடுத்து வந்தவர்கள் ஊர்வலமாக வந்த போது குறுக்குச்சாலை அருகே காவல்துறையினருக்கும் விழாவிற்கு வந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அப்போதைய விளாத்திகுளம் டிஎஸ்பி லயோலா இக்னேஷியஸ் கத்திக்குத்து ஏற்பட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து ஆண்டுதோறும் நடக்கும் விழாக்களில் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தியது. பின்னர்  2012ல் ஏற்பட்ட மோதல், கல்வீச்சை அடுத்து போலீஸ் தடியடியும் மேற்கொள்ளப்பட்டது.

அதன்பின்னர் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகத்தால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றும், நாளையும் நடைபெற உள்ள இவ்விழாவிற்காக மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான போலீசாரும், ஆயுதப்படை போலீசாரும் தற்போது பாதுகாப்பிற்காகக் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஏற்கனவே தென்மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன், நெல்லை சரக டிஐஜி கபில்குமார் சரத்கர், தூத்துக்குடி எஸ்பி முரளி ராம்பா உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் பலரும் பாஞ்சாலங்குறிச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டிருந்தனர்.

Tags : Kattabomman Festival ,
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு