×

தருவைகுளம் பகுதியில் கருவேல மரங்களால் காணாமல் போன நீர்நிலைகள்

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தருவைகுளம் பகுதியில் உள்ள கிராம கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் பல நீர்நிலைகள் தண்ணீரின்றி கட்டாந்தரையாக மாறி வருகின்றன. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தருவைகுளம், அனந்தமடம்பச்சேரி, ஏ.குமாரபுரம், சுண்டம்பச்சேரி, மேலமருதூர் ஆகிய கிராம பகுதிகளில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பருவ மழை மற்றும் அப்பகுதியில் உள்ள கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் மூலமாக நெல், பருத்தி, தக்காளி என ஆண்டுக்கு இரண்டு போகம் விவசாயிகள் வெள்ளாமை செய்து வந்தனர். இந்நிலையில் காலமாற்றத்தால் தொடர்ந்து பருவ மழை பொய்த்து போவதால் கண்மாய், குளங்களில் தண்ணீரின்றி விவசாயமும் மாறிப்போனது. மேலும் நீர்நிலைகளிலும் தண்ணீர் பெருகாததால் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன.

தற்போது மிளகாய், கம்பு போன்ற விவசாயம் மட்டுமே நடைபெறுகிறது. மேலும் கண்மாய், குளங்கள் தூர்வாரி பல வருடங்களாகியும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்போதுவரை கண்மாய்களை தூர்வார எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் விவசாயம் அழிந்ததோடு கடும் குடிநீர்  பிரச்னையும்  உள்ளது. தற்போது தேர்தல் காலம் என்பதால் பிரசாரத்திற்கு வருகின்ற ஆளுங்கட்சியினர் கண்டிப்பாக கண்மாய், குளங்கள் தூர்வாரப்படும் என வாக்குறுதிகளை அள்ளி வீசினாலும் தேர்தல் முடிந்தவுடன் இப்பகுதி விவசாயம் மற்றும் குடிநீர்  வசதிகளை கருத்தில் கொண்டு உண்மையிலேயே நடவடிக்கை மேற்கொள்வார்களா என அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் நெல், பருத்தி போன்ற பயிர்கள்தான் முக்கிய விவசாயமாக நடந்தது. பருவமழைக் காலத்தில் ஒரு போகம், பின்னர் கண்மாய், குளங்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் மூலமாக கோடைகாலத்தில் ஒன்று என இரு போக வெள்ளாமை வீடு வந்து சேரும். ஆனால் கால மாற்றத்தால் தற்போது மழை இல்லாமல் ஒரு போக சாகுபடி செய்வதே அரிதாக உள்ளது. மேலும் கண்மாய், குளம் நீர்நிலைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பல ஆண்டுகளாக கண்டு கொள்ளாததால் சீமை கருவேல மரங்கள் முளைத்து ஆக்கிரமித்துள்ளன.

மழைக்காலங்களில் ஓரளவு பெய்து தேங்கும் மழை நீர் கூட சீமை கருவேல மரங்களினால்  துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பல்லாண்டுகளாக கண்மாய்கள் தூர்வாரப்படாததால் பருவமழையின்போது கண்மாயில் தண்ணீர் தேங்காமல் வீணாக கடலில் கலக்கிறது. இதனால் விவசாயம் கைவிட்டு போனதோடு நிலத்தடி நீர்மட்டமும் இல்லாமல் குடிநீர்  பிரச்னைகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. வருகின்ற ஆட்சியாளர்களாவது இப்பகுதியில் தூர்வாரப்படாமல் கிடக்கும் கண்மாய், குளங்கள் போன்ற நீர்நிலைகளை தூர்வார நடவடிக்கைகள் மேற்கொள்வார்களா அல்லது தேர்தல் நேர வாக்குறுதிகள் காற்றில் போய்விடுமா என்று கவலைப்படுகிறோம் என்றனர்.

Tags : Karuvela ,area ,Thuruvukulam ,
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு