×

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்

திருப்புத்தூர்/காளையார்கோவில், மே 10: திருப்புத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர் சுவாமி கோயிலில் நேற்று காலையில் வைகாசி விசாக பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருப்புத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர் சுவாமி கோயிலில் வைகாசி பெருவிழா பத்து நாட்கள் நடைபெறும். இதை முன்னிட்டு நேற்று காலை கொடிமரத்திற்கு முன்பு 5 கும்பங்கள் வைத்து யாகம் செய்யப்பட்டது. பின்னர் காலை 7.20 மணியளவில் கொடிமரத்திற்கு பால், சந்தனம், தயிர் உள்ளிட்ட திரவியங்களாலும், யாகம் செய்யப்பட்ட புனிதநீராலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள், தீபாராதனை நடந்தன. காலை 7.45 மணிக்கு கொடியேற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கொடிமரத்திற்கும், அதற்கு முன் வைக்கப்பட்டுள்ள அஸ்திரத்திற்கும், ரமேஷ் குருக்களுக்கும் காப்பு கட்டப்பட்டது. பின்னர் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று முதல் நாள் விழா துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு சுவாமி திருவீதி உலா நடந்தது.

2ம் திருநாள் முதல் 8ம் நாள் வரை சுவாமி பூதம், அன்னம், ரிஷபம், சிம்மம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வெள்ளி கேடகத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். 5ம் நாளான மே 13ம் தேதி காலை 9 மணியளவில் அம்மன் தவத்திற்கு எழுந்தருளுவார். பின்னர் 10.15 மணியளவில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இரவு யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். 9ம் திருநாளான மே 17ம் தேதி காலை 5.10 மணிக்குமேல் 6 மணிக்குள் ஐம்பெரும் கடவுளர் திருத்தேருக்கு எழுந்தருளல் நடைபெறும். பின்னர் பக்தர்கள் சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபடுவார்கள். மாலை 4.35 மணியளவில் பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெறும். 10ம் திருநாளான மே 18ம் தேதி காலை 10.40 மணியளவில் திருத்தளி தீர்த்தத்தில் தீர்த்தம் வழங்குதல் நடைபெறும். இரவு 8 மணியளவில் கோயிலில் இருந்து சுவாமி தெப்ப மண்டபம் எழுந்தருள்வார். பின்னர் தெப்பத்திருவிழா நடைபெறும்.

இதேபோல், காளையார்கோவில் காளீஸ்வரர் கோவிலில் வைகாசி திருவிழா நேற்று தொடங்கியது. சோமேஸ்வரர் சமேத சவுந்தரநாயகி அம்மனுக்கு காலை 10.35 மணிக்கு காப்பு கட்டி, கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து சவுந்தரநாயகி அம்பாள் சமேத சோமேஸ்வரர் சுவாமிக்கு வேத மந்திரங்கள் முழங்க விஷேச அபிஷேகமும் தீபஆராதனையும் நடைபெற்றது. மாலையில் நேற்றைய மண்டகப்படிதாரர்களால் மாட்டுவண்டி பந்தயம், குதிரைவண்டி பந்தயம், நாடகம் மற்றும் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் தேவஸ்தான கண்காணிப்பாளர் சரவணகணேசன், சமஸ்தானம் தேவஸ்தானம் மேலாளர் இளங்கோ, ஏ.எல்.ஏ.ஆர் அறக்கட்டளை நிர்வாகிகள், அரண்மனை சிறுவயல் ஜமீன்தார் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். காளையார்கோவில் காளீஸ்வரர் கோயிலிலும் தொடங்கியது

Tags : festival ,Vishaka ,Thiruppathur Thiruthilinathar Temple ,
× RELATED சீனாவின் டிராகன் படகுத் திருவிழா கோலாகலம்..!!