×

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் முழங்கை மூட்டு எலும்பு மாற்று அறுவை சிகிச்சையில் டாக்டர்கள் சாதனை

ராமநாதபுரம், மே 10: ராமநாதபுரம் அண்ணாநகரைச் சேர்ந்த தொழிலாளி மணி மகன் முருகன்(45). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு வலது கையில் மூட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.  நாட்டு வைத்திய முறைப்படி சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சைக்கு பின்னும் கை சேராமல் விலகியே இருந்துள்ளது. இதுநாள்வரை கை தூக்க முடியாத நிலையில் சாப்பிடக்கூட முடியாமல், வேலைக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆனந்த் முருகனை முழுமையாக பரிசோதனை செய்தார். பின்னர் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜவகர்லால் ஆலோசனையின்படி ஆப்ரேசனுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மயக்கவியல் நிபுணர் சிலம்பரசன், எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்த் ஆகியோர் சுமார் 4 மணிநேரம் முழங்கை எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சை பின் கைகள் நன்றாக தூக்க முடியம், சில நாட்களில் எல்லாரும் போல வேலைகள் செய்ய முடியும்’ என்றனர்.

இதுகுறித்து டாக்டர் ஆனந்த் கூறுகையில், ‘கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு விபத்தில் அவருக்கு கை வலது கை மூட்டு எலும்பு முறிவு ஏற்பட்டு  நாட்டு மருந்து மூலம் சிகிச்சை பெற்றுள்ளார். அதில் குணமடையாத நிலையில் கை எலும்புகள் சேராமல் முன்னுக்குப் பின் இருந்துள்ளதால் அவரால் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாத நிலையில் இருந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்த நிலையில் அவரை பரிசோதனை செய்து பார்த்தபோது வலது கை மூட்டு எலும்புகள் முழுமையாக நொறுங்கி போயிருந்தது தெரிந்தது. அதை உடனே அறுவை சிகிச்சை மூலம் மாற்றுவதற்கு முயற்சி செய்தோம். குஜராத்திலிருந்து தேவையான உபகரணங்கள் வரவழைக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

தற்போது நலமுடன் உள்ளார். சில நாட்களில் அவர் வழக்கம்போல் எல்லா பணிகளையும் அவர் கையாலேயே செய்ய முடியும். மாவட்ட அரசு மருத்துவமனையில் முழங்கை மூட்டு எலும்பு மாற்று சிகிச்சை இதுவே முதல் முறை. தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைக்கு சுமார் ரூ.5 லட்சம் வரை செலவாகும். அரசு மருத்துவமனையில் இதுபோன்ற உயர்தர சிகிச்சை இலவசமாக செய்யப்படுகிறது. என்பதை பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் இது போன்ற உயர் தரமான சிகிச்சைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார்.

Tags : Ramanathapuram Government Hospital ,
× RELATED ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மழைகால நடவடிக்கையை கலெக்டர் ஆய்வு