×

ராமேஸ்வரம் நடராஜபுரம் பகுதியில் வீசிய பலத்த காற்றால் சவுக்கு மரம் சாய்ந்து 2 வீடுகள் சேதம்

ராமேஸ்வரம், மே 10: ராமேஸ்வரம் நடராஜபுரம் பகுதியில் இரவில் வீசிய பலத்த காற்றால் சவுக்கு மரம் முறிந்து விழுந்ததில் இரண்டு வீடுகள் சேதமடைந்தன. ராமேஸ்வரம்-தனுஷ்கோடி செல்லும் வழியில் நடராஜபுரம் மீனவர் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள புதுக்குடியிருப்பு பகுதியையொட்டி வனத்துறைக்குச் சொந்தமான சவுக்கு காடு உள்ளது. நேற்று முன்தினம் இரவில் இப்பகுதியில் பலத்த காற்று வீசிய நிலையில் பெரிய சவுக்கு மரம் ஒன்று முறிந்து அருகில் இருந்த வீடுகளின் மீது விழுந்தது. இதில் நாகேஸ்வரி என்பவருக்குச் சொந்தமான ஓட்டு வீடு உடைந்து முற்றிலும் சேதமடைந்தது. அருகில் இருந்த செந்தில்குமார் என்பவரின் வீட்டின் மீதும் சவுக்கு மரக்கிளைகள் விழுந்து சேதம் ஏற்பட்டது. வீட்டில் குடியிருந்தவர்கள் காற்றுக்காக வீட்டின் வெளி முற்றத்தில் படுத்திருந்ததால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

சம்பவம் குறித்து வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினருக்கு பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து ராமேஸ்வரம் கிராம நிர்வாக அலுவலர் ரொட்ரிகோ மற்றும் வனத்துறை அதிகாரிகள் சேதமடைந்த வீட்டினை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை செய்தனர். வீட்டின் மேல் விழுந்த மரத்தை அகற்றுவதற்கு உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இப்பகுதியில் உள்ள சவுக்கு மரங்களில் பல பட்டுப்போய் காற்றில் முறிந்து விழும் நிலையில்தான் உள்ளது. தற்போது காற்று வீசும் காலம் என்பதால் குடியிருப்போர் நலன் கருதி பட்டுப்போய் மோசமான நிலையில் உள்ள சவுக்கு மரங்களை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். வளர்ச்சி திட்ட பணிகளுக்கு 35 சதவீதம் கமிஷன் கேட்கும் அதிகாரிகள்?

Tags : Rameswaram Natarajapuram ,area ,houses ,
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...