×

களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

களக்காடு, மே 10: களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோயிலில் வைகாசி திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 17ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. களக்காட்டில் கி.பி.11ம் நூற்றாண்டை சேர்ந்த சத்தியவாகீஸ்வரர் - கோமதி அம்பாள் கோயில் உள்ளது. பழமைவாய்ந்த சிவஸ்தலமாகவும், பச்சையாற்றின் கரையில் அமைந்துள்ள பஞ்சலிங்க ஸ்தலங்களில் ஒன்றாகவும் திகழும் இந்த கோயிலில்  ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் வைகாசி திருவிழா பிரசித்திப்பெற்றது.

இந்தாண்டு திருவிழா, நேற்று (9ம் தேதி) தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் கோயில் நடைதிறக்கப்பட்டு, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. சுவாமி, அம்பாள் விஷேச அலங்காரத்தில் கொடிமர மண்டபத்திற்கு எழுந்தருளினர். 5.40 மணிக்கு கொடி மரத்தில் சங்கு நாதம் இசைக்க திருக்கொடி ஏற்றப்பட்டது. பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தன. தொடர்ந்து திருத்தேரிலும் திருக்கால் நாட்டப்பட்டது. முன்னதாக கொடி பட்டம் பல்லக்கில் வைக்கப்பட்டு, ரதவீதிகளில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

இதில் கோயில் நிர்வாக அதிகாரி முருகன் மற்றும் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். மதியம் ஆதிதிராவிடர் சமுதாயம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் சுவாமியும், அம்பாளும் பூங்கோயில் வாகனத்தில் திருவீதி உலா வந்தனர். விழாவை முன்னிட்டு தினமும் காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், இரவில் சுவாமி -அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருதலும் நடைபெறுகிறது.
விழாவின் 8ம் திருநாளான 16ம் தேதி நாடார் சமுதாயத்தினர் சார்பில் மண்டகப்படி நடக்கிறது. அன்று மதியம் 2 மணிக்கு நடராஜர் பச்சை சாத்தி எழுந்தருளும் வைபவம் இடம்பெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா, 9ம் திருநாளான 17ம் தேதி நடக்கிறது. அன்று மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 10ம் நாளான 18ம் தேதி தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் ஊழியர்கள் மற்றும் மண்டப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

Tags : festivities ,Sathiyaviswara ,
× RELATED அரண்மனை 4ல் தமன்னா, ராசி கன்னா