×

கொலை, கொள்ளைகளால் சிறையில் சிதையும் இளைஞர்களின் வாழ்க்கை விசாரணை ஆய்வில் அதிர்ச்சி

மதுரை, மே 10: மதுரையில் கொலை, கொள்ளை சம்பவங்களில் இளைஞர்கள் ஈடுபடுவது அதிகரித்திருக்கும் அதிர்ச்சி தகவல் போலீஸ் விசாரணை ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இன்றைய இளைஞர்களில் பலர் தங்களின் எதிர்கால வாழ்க்கையை பற்றி சிறிதும் கவலைப்படாமல் படிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். அவர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், சுகபோகமாக வாழவும், கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டும், போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி, பாலியல் குற்றங்களிலும் ஈடுபடுகின்றனர். மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் கொலை குற்றங்களில் 18 வயது முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்கள் தான் அதிகமாக ஈடுபட்டு வருவது விசாரணை ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் இளைஞர்களின் எதிர்காலம் தொலைந்து விடுகிறது. அவர்களின் வாழ்க்கை சிறையில் சிதைந்து போகிறது. கொலை உள்ளிட்ட வழக்குகளில் சிக்கும் இவர்கள் அரசு வேலை, வெளிநாட்டு வேலைக்கு செல்ல முடிவதில்லை. வழக்கினால் கடவுசீட்டு, பொதுவான தடையில்லா சான்றிதழ், நற்சான்றிதழ் பெறமுடியாமல் தவித்து வருகின்றனர்.

உளவியியல் நிபுணர் ஒருவர் கூறும்போது, ‘‘பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தங்களது படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுவதினால் குற்ற சம்பவங்களில் ஈடுபட அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே பாதியில் படிப்பை விட்டவர்களை நேரில் அழைத்து உளவியியல் ரீதியான ஆலோசனைகளுடன், கல்வி தொடரும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது அவசியம். மாணவர்களுக்கு குற்ற செயல் தடுப்பு விழிப்புணர்வு வகுப்புகள் சிறந்த வல்லுநர்களை கொண்டு நடத்த வேண்டும். மாணவர்கள் செய்யும் தவறுகளை பெற்றோர், ஆசிரியர்கள் கண்டிக்க வேண்டும். மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் போதை தடுப்பு குழுக்கள் மூலம் விழிப்புணர்வு மற்றும் படிப்பில் அதிக கவனம் செலுத்த அறிவுரை வழங்க வேண்டும்’’ என்றார். இரண்டு மாதத்தில் 13 கொலை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மதுரையில் கடந்த 2 மாதங்களில் வாழைத்தோப்பு பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி, விளாங்குடி கல்லூரி மாணவர் பாண்டி உட்பட 13 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் பலர் 25 வயதிற்கு குறைவான இளைஞர்கள் என்பது அதிர்ச்சிக்குரிய உண்மையாகும்’’ என்றார்.

Tags : murder ,murders ,robbery ,
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட்...