×

கொடைக்கானல் மலைச்சாலையை ஸ்கேட்டிங்கில் கடந்து மதுரை மாணவர்கள் சாதனை

கொடைக்கானல், மே 10: கொடைக்கானலுக்கு மலைச்சாலையில் ஸ்கேட்டிங் மூலம் கடந்து வந்து மதுரை மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர். மதுரை அண்ணாநகரை சேர்ந்த ராணுவவீரர் செல்லத்துரையின் மகன்கள் ராகுல் கண்ணன் (15). கமலேஷ் (10). இருவரும் அப்பகுதியில் உள்ள ஸ்கேட்டிங் அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் மற்றும் ஸ்கேட்டிங் கோச் ரத்தினகுமார் உள்பட 3 பேரும் கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச்சாலையில் மலை ஏறும் இடமான காற்றோடு பகுதியிலிருந்து ஸ்கேட்டிங் செய்து கொண்டே கொடைக்கானலுக்கு வந்தனர். சுமார் 52 கிமீ மலைச்சாலையை மூவரும் ஸ்கேட்டிங் செய்து கொண்டே வந்து சாதனை புரிந்துள்ளனர். இதுகுறித்து கோச் ரத்தினகுமார் கூறியதாவது, ‘2 மாணவர்களும் சிறப்புத்திறன் வாய்ந்த மாற்றுத்திறனாளிகள் ஆவர். ராகுல் கண்ணன் 10ம் வகுப்பும், கமலேஷ் 5ம் வகுப்பும் படிக்கின்றனர்.

ராகுல் கண்ணன் 3 அடி உயரமுள்ள தடை தாண்டுதல் முறையில் ஒரு நிமிடத்தில் 35 முறை ஸ்கேட்டிங் செய்து கொண்டே தாவி சாதனை செய்துள்ளார். கமலேஷ் 9 மணிநேரம் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்து சாதனை படைத்துள்ளார். மாநில அளவில் பல பரிசுகள் பெற்றுள்ளனர். தேசிய அளவிலும், உலக அளவிலும் சாதனை செய்வதற்காக இந்த ஸ்கேட்டிங் செய்ய முடிவு செய்தோம். மலைச்சாலையில் ஸ்கேட்டிங்கில் செல்வது என்பது மிக சவாலான காரியம். இதற்காக கடுமையான பயிற்சியை இவர்களுக்கு அளித்தேன். கீழ்நோக்கி ஸ்கேட்டிங் செய்து செல்வது வேகமாக இருக்கும். ஆனால் இது அவர்களுக்கு தேவையான பயிற்சியை தராது. அதனால் நாங்கள் கீழ்நோக்கி செல்வதற்கு திட்டமிடவில்லை’ என்றார்.

Tags : Madurai ,Kodaikanal ,hills ,
× RELATED கொடைக்கானல் மலைப்பகுதியில் கோடை...