×

திண்டுகல் ஜிஹெச்சில் மனநோய்க்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

திண்டுக்கல், மே 10: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மனநோய்க்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் கண், இதயம், காசநோய், பிரசவம், மனநலம் உள்பட பல்வேறு சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இதில் மனநலத்திற்கு சிகிச்சை தரும் தனிப்பிரிவு, மாவட்ட மனநல சிகிச்சை பிரிவு என்று அழைக்கப்படுகிறது. இந்த சிகிச்சை பிரிவில் குடிபோதை, மன சிதைவு மற்றும் குழப்பம், வலிப்பு உட்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை பிரிவில் கடந்தாண்டு 3 ஆயிரத்து 354 பேர் மனநலத்திற்கு சிகிச்சை பெற்றுள்ளனர். இந்தாண்டு ஜனவரியில் 190 பேர், பிப்ரவரியில் 208, மார்ச்சில் 230, ஏப்ரலில் 258 பேர் என இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து மனநல சிறப்பு மருத்துவர் டாக்டர் உமாதேவி கூறியதாவது: ‘இன்றைய காலகட்டத்தில் தனிமை, குடிபோதை, தவறான பழக்க, வழக்கம், கடன் தொல்லை, புகையிலை பொருட்கள் பயன்படு–்த்துதல், அதிக நேரம் இணையதளத்தை பயன்படுத்தி செல்போன் பார்த்தல், வளர்இளம் பருவ பிரச்னைகள் உட்பட பல்வேறு காரணங்களால் பலர் மனநலம் பாதிப்பிற்கு ஆளாகுகின்றனர். கூட்டு குடும்ப வாழ்க்கை என்பது குறைந்து விட்டது. அதனால் குழந்தைகள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் கவனமாக கண்காணிக்க வேண்டும். மேலும் இங்குள்ள மனநல சிகிச்சை பிரிவுக்கு வருபவர்களுடன், பேசி அவர்களின் பிரச்னைகளை கண்டறிதல், ஆலோசனை, மருந்து, மாத்திரை வழங்குதல், நடத்தை மற்றும் சிந்தனை மாற்று பயிற்சி, மூச்சு மற்றும் உளவியல் ஆலோசனை போன்ற சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என்றார்.

Tags : Thindal Ghech ,
× RELATED அய்யலூர் பேரூராட்சியில்...