×

பாளை தியாகராஜ நகரில் விதிகளை மீறி கட்டப்பட்ட புதிய வணிக வளாகத்திற்கு ‘சீல்’

நெல்லை, மே 10: நெல்லையில் விதிமுறைகளை மீறி பாளை தியாகராஜநகர் ரயில்வே மேம்பாலம் அருகே கட்டப்பட்டு வரும் புதிய வணிக வளாகத்திற்கு உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள் சீல் வைத்தனர். அது தொடர்பான  நோட்டீஸ் ஒட்டப்பட்டது. பாளை தியாகராஜநகர் புதிய ரயில்வே மேம்பாலம் அருகே பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் முழுவதும் இரும்பு தூண்களைக் கொண்டு கட்டப்பட்டு வருகிறது. இதில் தரை தளம் மற்றும் 2 தளங்கள் கட்ட திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
ஆனால் வணிக வளாக கட்டிடம், விதிகளை மீறி கூடுதல் தளங்களுடன், ஜன்னல்கள், வாகன நிறுத்துமிடம் முறையாக இன்றி திட்ட அனுமதிக்கு மாறாக கட்டப்பட்டு வருவதாக உள்ளூர் திட்டக் குழுமத்திற்கு தகவல் தெரிய வந்தது. இதனையடுத்து அனுமதியின்றி கட்டுவதாக உள்ளூர் திட்டக் குழும அதிகாரிகள் நோட்டீஸ் அளித்தனர். மேலும் 30 நாட்களுக்குள் இந்த பாதிப்புகளை சரி செய்து அதற்கான விவரத்தை சமர்ப்பிக்குமாறு அவகாசம் வழங்கினர்.  

எனினும் குறிப்பிட்ட காலத்திற்குள் முறைகேடுகள் சரி செய்யப்படவில்லை. இதையடுத்து நேற்று மாலை அங்கு வந்த உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் ‘விதிகளை மீறி கட்டப்பட்டு வருவதாக கூறி’ அந்த வணிக வளாகத்திற்கு சீல் வைத்தனர். அதற்குரிய அறிவிப்பு நோட்டீசும் ஒட்டப்பட்டது. மேலும் வணிக வளாகத்தை சீல் வைத்ததால் 24 மணி நேரத்திற்குள் கட்டிடத்தின் உள்ளே உள்ள பொருட்களை வெளியே அப்புறப்படுத்தவும், கட்டிடத்தின் செயல்பாடுகளை நிறுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags : Palai Thyagaraja ,city ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து...