×

போலீசார் கைதுக்கு பயந்து அரசு மருத்துவமனையில் இருந்து குதித்த வாலிபர்

நெல்லை, மே 10: போலீஸ் கைதுக்கு பயந்து நெல்லை அரசு மருத்துவமனையிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரின் கை, கால் முறிந்தது. நெல்லை வண்ணார்பேட்டை வெற்றி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த சந்திரன் மகன் பாண்டிச்செல்வன் (28). மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஷபி முகம்மது உள்ளிட்ட 3 பேர் நெல்லையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். அங்கு வேலை செய்த நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த சியாமளா (38) என்பவரிடம் இருந்து பாண்டிசெல்வன் உள்ளிட்ட 3 பேரும் ஐந்து பவுன் நகையை வாங்கி அடமானம் வைத்தனர். அவர் நகையை பலமுறை கேட்டும் அவர்கள் அதனை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் டவுன் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

கடந்த 4ம்தேதி விசாரணைக்கு ஷபி முகம்மது, பாண்டிச்செல்வன் ஆஜராகினர். மறுநாள் (5ம்தேதி) போலீசார் தன்னை தாக்கியதாக கூறி பாண்டிச்செல்வன் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். இதுதொடர்பாக போலீசார் ஷபி முகம்மதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாண்டிச்செல்வன் டிஸ்சார்ஜ் ஆனதும் கைது செய்ய போலீசார் அவரை கண்காணித்தனர்.

இதனிடையே நேற்று பாண்டிச்செல்வன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். போலீசார் தன்னை கைது செய்யக்கூடும் என பயந்த அவர் மருத்துவமனை 2வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில் அவரது இரு கால்களும், ஒரு கையும் முறிந்தது. இதையடுத்து அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : arrest ,government hospital ,
× RELATED மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து...