×

சூறாவளி காற்றுடன் கனமழை விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில்

திருப்பத்தூர், மே 10: திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். வேலூர் மாவட்டம் வெயிலுக்கு பெயர் போன பெரிய மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் கடைக்கோடியில் உள்ளது திருப்பத்தூர் நகரம். இந்த நகரத்தில் தற்போது அக்னி வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்த வேளையில் சுமார் 110 டிகிரி வரை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இதனால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். மேலும், அக்னி நட்சத்திரம் தொடங்கியதிலிருந்து அக்னி வெயில் மேலும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது.

இந்நிலையில், நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்று வீசியது. அப்போது திருப்பத்தூர், விஷமங்களம், குரிசிலாப்பட்டு, தண்ணீர் பந்தல், ஜமுனா புதூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தென்னை மரங்கள் காற்றில் வேகத்திற்கு தகுந்தாற்போல் ஆடியது. அதன்பின்னர் இடி, மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. அப்போது வறண்டு கிடந்த விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி பூமியின் ஈரப்பதம் வலுப்பெற்றது. இந்த கோடை மழையால் விவசாயிகளும் பொதுமக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : areas ,Tirupattur ,
× RELATED தஞ்சாவூர் மேம்பாலத்தில் அடுத்தடுத்து...