×

பெண் இன்ஸ்பெக்டர்களுக்கு வாகனம் கொடுத்தும் கிராமங்களை புறக்கணிக்கும் நடமாடும் ஆலோசனை குழு : விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கிராமம்தோறும் சென்று பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அனைத்து மகளிர் போலீசார் திட்டத்தை புறக்கணித்து முடங்கி உள்ளனர். இதை முறையாக செயல்படுத்த மாவட்ட எஸ்.பி நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. இங்கு, பெண்கள் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. நகரத்தில் உள்ள பெண்கள் தொடர்பான பிரச்னைகளை, மகளிர் காவல் நிலையங்களுக்கு சென்று தீர்வு கண்டு வருகின்றனர். ஆனால், கிராமப் புறத்தில் உள்ள பெண்களின் பிரச்னைகளுக்கு, காவல் நிலையங்களுக்கு செல்ல முடியாத பல வகையான காரணங்கள் இருப்பதால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 2012ம் ஆண்டு நடமாடும் பெண்கள் ஆலோசனை குழு கூட்டம் நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., போலீசார், அரசு மருத்துவர், வழக்கறிஞர், சமூக ஆர்வலர்கள் கொண்ட குழுவினர் இடம் பெற்று இருந்தனர். இந்த குழுவினர் செல்ல வாகனமும் அரசு வழங்கியது. அனைத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கும் வாகனம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கிராமங்களில் சனிக்கிழமை தோறும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடைபெறும். அதில், பெண்கள் தொடர்பான பிரச்னை மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவியர் பாதுகாப்பு குறித்து பெற்றோர் விவாதித்தனர். அப்போது மகளிர் போலீசார் மற்றும் மருத்துவர்கள், பெண்கள் மற்றும் பல தரப்பினருக்கு ஆலோசனைகள் கூறி வந்தனர். இதனால், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவியர் தவறான வழிகளில் செல்வது தடைபட்டது. இதனால் காவல் நிலையங்களுக்கு செல்லாமலேயே பெண்கள் தொடர்பான பிரச்னைகளை தீர்த்து கொள்ள நடமாடும் ஆலோசனை குழு கூட்டம் வசதியாக இருந்தது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் காவல் ஆய்வாளர்களுக்கு வாகனம், நடமாடும் ஆலோசனை குழுவுக்கு வாகனம் கொடுத்தும், கடந்த ஓராண்டாக இந்த கூட்டங்களை நடத்த கிராமப் புறங்களுக்கு குழுவினர் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கிராமப்புற பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவியருக்கு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகள் கிடைக்காத நிலை உள்ளது. எனவே, அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களும், கிராமங்களுக்கு சென்று, பெண்கள் குழு கூட்டம் நடத்தி ஆலோசனை வழங்க மாவட்ட எஸ்.பி., பொன்னி நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. காவல் நிலையங்களுக்கு செல்லாமலேயே பெண்கள் தொடர்பான பிரச்னைகளை தீர்த்து கொள்ள நடமாடும் ஆலோசனை குழு கூட்டம் வசதியாக இருந்தது.

Tags : committee ,villages ,inspectors ,
× RELATED சிதம்பரம் கோயிலில் உள்ள கோவிந்தராஜ...