×

விசைத்தறி தொழிலாளர் கூலி பிரச்னை ஆர்டிஓ தலைமையில் நடந்த முத்தரப்பு பேச்சு தோல்வி

திருச்செங்கோடு,மே 9: குமாரபாளையம் விசைத்தறி தொழிலாளர்கள் 20 சதவீத கூலி உயர்வை வலியுறுத்தி நடத்தி வரும் வேலை நிறுத்த போராட்டம் குறித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.குமாரபாளையத்தில் சுமார் 50 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக ஏஐடியுசி மற்றும் சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள்  20 சதவீத கூலி உயர்வு கேட்டு போராடி வருகின்றனர். விசைத்தறி உரிமையாளர்களும், தொழிலாளர்களும் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடும் ஏற்படவில்லை. கடந்த 2ம் தேதி விசைத்தறி தொழிலாளர்கள் அரசு தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என வருவாய் கோட்டாட்சியர் மணிராஜிடம் மனு அளித்தனர். அதன்படி நேற்று  அடப்புத்தறி  உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள்  கொண்ட  முத்தரப்பு பேச்சுவார்த்தை திருச்செங்கோடு ஆர்டிஓ மணிராஜ் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்றது. அடப்புத்தறி உரிமையாளர்கள் சார்பில் தலைவர் பழனிசாமி, சிஐடியு சார்பில் நகர செயலாளர் பாலுசாமி, மாவட்ட செயலாளர் அசோகன், மாவட்ட தலைவர் மோகன், ஏஐடியுசி சார்பில் கே.எஸ். பாலசுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். நாமக்கல் தொழிலாளர்  நலத்துறை உதவி ஆணையர் மாதேஸ்வரன், எஸ்ஐ  தேவி, தாசில்தார் தங்கம்  ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நீண்ட நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அடப்புத்தறி உரிமையாளர்கள்  ஜவுளி உற்பத்தியாளர்கள் தரும் உயர்வை அப்படியே தொழிலாளர்களுக்கு தருவதாக  கூறினர். ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறுகையில் ஜிஎஸ்டி போன்றவற்றால் தொழில் நசிந்து வருவதாகவும், முன்பு போல வட மாநிலங்களில் விற்பனை இல்லை என்றும் அதனால் அதிகப்படியான உயர்வு தர இயலாது என்றும் தெரிவித்தனர். விசைத்தறி உரிமையாளர்கள் 10 சதவீதம் மட்டுமே கூலி உயர்வு தர முடியும் என உறுதியாக  கூறினர். வீட்டு வாடகை, மருத்துவ செலவு, கல்வி செலவு  உள்ளிட்டவை  பல மடங்கு ஏறி விட்டதால் தங்களுக்கு  20 சத கூலி உயர்வு வேண்டும் என தொழிலாளர்கள் தெரிவித்தனர். மேலும் 5 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட கலெக்டராக இருந்த தட்சிணாமூர்த்தி தலைமையில் ஏற்பட்ட  ஒப்பந்தத்தின்போது  20% கூலி உயர்வு தருவதாக இருந்தது. அதனை கொடுக்கவில்லை என்றும் தற்போது 20 சதவீத கூலி உயர்வு தங்களுக்கு அவசியம் வேண்டும்  என்றும் தொழிலாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.  மூன்று பிரிவினரும் தங்கள் கருத்தையே வலியுறுத்தி விட்டுக்கொடுக்காததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை குறித்து சிஐடியு விசைத்தறி தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அசோகன் கூறும்போது: விசைத்தறி உரிமையாளர்கள் 10 சதவீதம் மட்டுமே கூலி உயர்வு அளிக்க முடியும் என்று கூறுகின்றனர். தொழிலாளர்கள்  20 சதவீதம் கூலி உயர்வு கேட்கின்றனர். கூலி உயர்வு கிடைக்கும் வரை  வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்று கூறினார்


Tags : RDO ,Loom Labor ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகம் முற்றுகை