×

11, 12ம் வகுப்பு துணை தேர்வுக்கு தட்கல் மூலம் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி, மே 9:  புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் குப்புசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மார்ச் 2019 தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள்: 2019ம் ஆண்டு ஜூன் மாதம் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 சிறப்பு துணை தேர்வெழுத தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் ஆன்-லைனில் விண்ணப்பிக்கத் தவறிய தேர்வர்களின் கோரிக்கையினை ஏற்று சிறப்பு நிகழ்வாக தேர்வர்களின் நலன் கருதி சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) ஆன்-லைனில் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், புதுச்சேரி இணை இயக்குநர் அலுவலகத்தில் 9 மற்றும் 10 (இன்று, நாளை) ஆகிய இரு தேதிகளில் நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தனியார் ப்ரவ்சிங் சென்டர்கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது.

 மார்ச் 2019 தேர்வெழுதிய தேர்ச்சி பெறாத தேர்வர்கள்: பிளஸ்-1 (அரியர்), பிளஸ்-2 தேர்வினை |எழுதிய தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் புதுச்சேரி இணை இயக்குநர் அலுவலகத்தில் வருகிற 13, 14 ஆகிய இரு நாட்களில் தங்களது விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ள வேண்டும். பிளஸ்-1 (அரியர்), பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதியவர்கள் தமது மதிப்பெண் பட்டியல் நகலினையும், தேர்வெழுதாதவர்கள் தேர்வுக் கூட நுழைவு சீட்டினையும், விண்ணப்பத்தினை பதிவு செய்யும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும். ஒரு பாடத்திற்கு ரூ.50ம், இதர கட்டணமாக ரூ.35ம், சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1000ம், ஆன்-லைன் பதிவு கட்டணமாக ரூ.50ம் செலுத்த வேண்டும். தேர்வு கூட அனுமதி சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். தனித்தேர்வர்களுக்கு தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது எனவும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...