×

அடிப்படை வசதிகள் இல்லாத பார்த்திபனூர் பஸ் ஸ்டாண்ட் சுகாதார சீர்கேடு அதிகரிப்பு

பரமக்குடி, மே 9: பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் பேருந்து நிலையத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமலும், தேங்கியுள்ள கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பயணிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.பரமக்குடி அருகே வளர்ந்து வரும் நகராக பார்த்திபனூர் உள்ளது. இங்கு சுமார் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வகித்துவருகின்றனர், மேலும், பார்த்திபனூரை சுற்றிலும் அதிகமான கிராமங்கள் உள்ளதால், பொருள்களை வாங்கவும், விற்பனை செய்யவும் தினமும் சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்துசெல்கின்றனர். மதுரையிலிருந்து கமுதி, சாயல்குடி, கடலாடி உள்ளிட்ட பேருந்துகளும், ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட பேருந்துகளும் பார்த்திபனூர் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்வதால் எப்போதும் பரபரப்பாகவே கானப்படும். ஆனால் இங்குள்ள பேருந்துநிலையத்தில் பயணிகள் நிற்பதற்கும், அமர்வதற்கும் சிறிய நிழற்குடை ஊராட்சி சார்பாக கட்டப்பட்டாலும், கட்டிடத்தின் மேல் பகுதியில் செடிகொடிகள் முளைத்து எப்போது இடிந்துவிழும் என்ற நிலையில், பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் காத்திருக்கின்றனர். பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு குடிநீர் வசதியில்லாததால் விலை கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கி குடிக்க வேண்டியுள்ளது.பேருந்துநிலையத்திற்குள் வரும் பேருந்துகளிடம் வசூல் செய்யும் ஊராட்சி நிர்வாகம், பயணிகளுக்கு தேவையான குடிநீர் வசதிகளை செய்துகொடுக்காமல் உள்ளது.

பேருந்துநிலையத்தின் பின்பகுதியில் உள்ள கழிப்பறைகளை பயன்படுத்தும் விதமாக இருந்த பாதையை, ஊராட்சி நிர்வாகம் அடைத்துள்ளதால் பேருந்துநிலையத்திற்கு வரும் பயணிகள் இயற்கை உபாதைகளை கழிக்க பேருந்துநிலையத்தை கடந்து வெளியில் செல்லவேண்டியுள்ளது. இதனால் இரவு நேரங்களில் பேருந்து நிலையத்திற்குள்ளேயே திறந்தவெளியில் சிறுநீர் மற்றும் மலம் கழித்துவிட்டு செல்வதால் சுகாதாரமற்ற நிலை உருவாகியுள்ளது.பேருந்துநிலையத்தின் முன்பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரா சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே பேருந்து நிலையத்திற்குள் குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதுடன், தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றவும், சுகாதாரம் காக்கவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : facilities ,
× RELATED கிளாம்பாக்கத்தில் அனைத்து வசதிகளும்...