×

மாணவர்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கும் செல்போன் மனநல மருத்துவரின் அதிர்ச்சி ரிப்போர்ட்

மதுரை, மே 9: செல்போன்களை அதிகமாக பயன்படுத்தும் மாணவ-மாணவிகள் சுயமாக சிந்திக்கும் திறனை இழந்து வருகின்றனர் என்று மனநல மருத்துவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.இன்றைய நாகரீக உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள் அதிகரித்து விட்டன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர் செல்போன் மற்றும் லேப்டாப்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதனால் வீட்டிலிருந்து, டிவியில், சினிமா மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை கண்டுகளித்த காலம்போய், இன்று கையடக்க போன், லேப்டாப்களில் நெட் இணைப்புடன் எங்கிருந்தாலும் அந்த இடத்திலேயே சினிமா, விளையாட்டு, தொடர்கள் உள்ளிட்ட அனைத்தையும் பார்க்க முடிகிறது. இந்த வளர்ச்சி, மாணவ சமுதாயத்திற்கு ஒரு வழியில் உதவியாக இருந்தாலும், பல்வேறு வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. செல்ேபான் பேசுவதற்கு மட்டுமே என்ற நிலை மாறி, செல்போனில் மெசேஜ், வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்டவைகளின் பயன்பாடுகள் அதிகரித்து விட்டன. ஒரு வீட்டில் 5 பேர் இருந்தால், அந்த 5 பேரும் செல்போன் வைத்துள்ளனர். இரவு 10 மணிக்கு மேல் டிவி பார்ப்பதையே தவிர்க்க வேண்டும். ஆனால் நள்ளிரவையும் தாண்டி, குழந்தைகள் உள்ளிட்ட மாணவ-மாணவியர் பலரும் செல்போனை பயன்படுத்துகின்றனர். இது ேவதனையான, விபரீதத்தை ஏற்படுத்தும் செயலாகும் என்பது பல பெற்றோருக்கு தெரிவிதில்லை.இதுகுறித்து மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மனநலத்துறை தலைவர் குமணன் கூறுகையில், ``வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட தொடர்புகளில் நல்ல விஷயங்களைவிட, தேவையில்லாத தவறான விஷயங்களே அதிகமாக உள்ளது. இதை பயன்படுத்தும் போது, தவறான, ஆபத்தான இடத்திற்கு கூட்டிச் சென்று விடுகிறது. இதுதான் உண்மை. அனைத்திற்கும் மேலாக செல்ேபானை அதிகளவில் பயன்படுத்தும் மாணவர்கள் சுயமாக சிந்திக்கும் திறனை, கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றனர். கவனச்சிதறலும் ஏற்படுகிறது. ஆபாசம், வன்முறை உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது.

இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. எனவே போன்களை பயன்படுத்துவதை மாணவ-மாணவியர் தவிர்க்க வேண்டும். அல்லது அதில் உள்ள நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். மாணவ-மாணவியரை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். நல்லது கெட்டதை உணரும் வயது வரை, செல்போன், லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் பயன்படுத்த அனுமதிக்க கூடாது. பள்ளி மாணவ-மாணவியருக்கு, பல தேவைகளுக்காக, பெற்றோரின் செல்போன் எண்களையே கொடுக்கலாம்’’ என்றார்.
கேள்விக்குறியாகும் எதிர்காலம்மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் கந்தசாமி கூறும்போது, ``முதல்நாள் வீட்டில் செல்போனில் பார்த்த பல்வேறு விஷயங்களை பள்ளிக்கு வந்தவுடன் மாணவர்கள் ஒருவருக்கொருவர் பரிமாரிக்கொள்கின்றனர். பின்னர்தான் ஆசிரியர் நடத்தும் பாடத்தில் கவனம் செலுத்துகின்றனர். பல மாணவ-மாணவியர் `நெட்’டை பயன்படுத்தி தேவையில்லாத பலவற்றையும் பார்த்து தவறான பாதைக்குச் செல்கின்றனர். அப்படிப்பட்ட மாணவர்கள் குறித்து தெரிந்தவுடன், அவர்களுக்கே தெரியாமல், அவர்களது பெற்றோரை வரவழைத்து சில அறிவுரைகளை வழங்கியுள்ளோம். இதை இப்படியே வளரவிட்டால் மாணவர் சமுதாயத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்’’ என்றார்.




Tags : cellphone mental health physician ,student ,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...