×

ஓமலூர் வட்டாரத்தில் கோடை மழை விவசாய நிலங்களுக்கு ஊட்டமேற்ற தக்கை பூண்டு வளர்த்து உழவு பணி

ஓமலூர், மே 9: ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் விளை நிலங்களில் தக்கைப்பூண்டு செடி வளர்ப்பை அதிகரித்துள்ளனர். தக்கைப்பூண்டுடன் வயலை உழுது விவசாயம் செய்தால் மண்ணின் தரம் மேம்படும் என வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓமலூர், காடையாம்பட்டி வட்டார கிராமங்களில் தற்போது மழை பெய்து வருவதால், விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி, விளை நிலங்களுக்கு தேவையான தழைச்சத்திற்காக, விவசாயிகள் தக்கைப்பூண்டு செடிகளை வளர்த்து வருகின்றனர்.

காடையாம்பட்டி ஒன்றியத்தில், சம்பா நெல் பருவத்திற்கு பின் விவசாயிகள் தக்காளி, பச்சைப்பயறு, எள், காய்கறி என மாற்று பயிர்களை பயிரிட்டுள்ளனர். தற்போது, மழை பெய்வதால் கிணற்று பாசன விவசாயிகள் நெல் பயிரிட நிலங்களை தயார் செய்து வருகின்றனர். விளைநிலங்களில் தக்கைப்பூண்டு செடிகளை வளர்த்து வருகின்றனர். விதைக்கப்பட்ட, 45 நாட்களில் நன்கு வளர்ந்த செடிகளை தண்ணீர் பாய்ச்சி, டிராக்டரில் உழுதால் விளைநிலத்திற்கு தேவையான தழைச்சத்து கிடைக்கும்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஏக்கருக்கு, 20 கிலோ தக்கைப்பூண்டு விதைகள் விதைக்கப்படுகிறது. இதனால், மண்ணின் வளம் மேம்பட்டு தரமும் உயர்கிறது. நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் செயல்பாடும் நன்றாக இருக்கும். ரசாயன உரங்களை பயன்படுத்துவதால், பயிருக்கு சத்து கிடைக்குமே தவிர, மண்வளம் பாதிக்கும். தக்கைப்பூண்டு செடிகளில், கார்பன், நைட்ரஜன் ஆகியவை இருப்பதால், மண்வளம் பாதுகாக்கப்பட்டு நெல் பயிரிடும்போது நல்ல மகசூலை பெறலாம். ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள கிராமப்பகுதிகளில், தக்கைப்பூண்டு செடிகள் வளர்க்கப்பட்டுள்ளது. சில தினங்களில், அதை உழுது நிலத்தினை பதப்படுத்தி, பின், நடவுப் பணிகளை மேற்கொள்ளப்படும் என்றனர்.

Tags : Summer rains ,region ,Omalur ,lands ,
× RELATED இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்!