×

அடிப்படை சம்பளத்தில் கை வைக்கும் ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்து அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை  

திருச்சி, மே 9: நுண்ணுர மையத்தில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தில் கை வைக்கும் ஒப்பந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், துப்புரவு தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்தும் தொழிலாளர்கள் அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்திற்குட்பட்ட 11 வார்டுகளில் சுய உதவிக்குழு தொழிலாளர்கள் 350 பேர் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு கடந்த மாதம் 25ம் தேதி தான் சம்பளம் வழங்கப்பட்டது. இதற்காக அப்போது போராட்டம் நடத்தப்பட்டது.

இதையடுத்து, வரும் மே மாதம் 5ம் தேதி சம்பளம் போடுவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் குறிப்பிட்டப்படி சம்பளம் வரவில்லை. அதே போல மாநகராட்சியில் 30 நுண்ணுரம் தயாரிக்கும் கூடம் உள்ளது. ஒரு உரக்கூட மையத்தில் 25 பேர் பணியாற்றி வந்தனர். இந்த தொழிலாளர்கள் வீடு வீடாக ெசன்று மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து அவற்றை உரமாக்க வேண்டும். அவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நேரடியாக சம்பளம் வழங்கி வந்தது.

இந்நிலையில், நாகர்கோவிலைச் சேர்ந்த ஏஎம்கே என்ற தனியார் நிறுவனம் நுண்ணுரக் கூடங்களை செயல்படுத்த ஒப்பந்தம் பெற்றது. இந்த நிறுவனம் வந்த பின் 25 பேர் பணியாற்றிய இடத்தில் 6 பேர் நீக்கம் செய்யப்பட்டு, ஒரு கூடத்துக்கு 19 பேர் மட்டுமே பணியில் நீட்டிப்பு செய்தது. மேலும் இந்த தொழிலாளர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக (நிர்வாக செலவு உள்பட) ரூ.469 என அந்நிறுவனத்துக்கு மாநகராட்சி வழங்குகிறது. ஒப்பந்தப்படி தொழிலாளர்களுக்கு நாள் தோறும் ரூ.360 சம்பளத்தில் பிஎப் பணம் பிடித்தம் போக ரூ.313ஐ தொழிலாளர்களுக்கு அந்த நிறுவனம் வழங்க வேண்டும். ஆனால், ரூ.43 பிடித்துக்கொண்டு தொழிலாளர்களுக்கு ரூ.270 மட்டுமே வழங்குகிறது.

இதையடுத்து, சிஐடியூ துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில், அரியமங்கலம் கோட்டத்துக்குட்பட்ட வார்டுகளில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரியும், ஒப்பந்த அடிப்படையில் நுண்ணுர மையத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு முறையான அடிப்படை சம்பளம் வழங்கக் கோரியும் அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் நேற்று முற்றுகை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் மாறன் தலைமை வகித்தார். பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர். சம்பளத்துக்கான செக்கை வழங்கியதையடுத்தும், நுண்ணுர துப்புரவு தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்தும் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

இது குறித்து மாறன் கூறுகையில், ‘முறையான சம்பளம் வழங்கியதுபோக நிறுவனத்துக்கு மாதம் ரூ.19 லட்சம் லாபமாக நிற்கும். அந்த பணத்திலிருந்து தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு செய்து தரவேண்டும். அதையும் செய்யாமல், அடிப்படை சம்பளத்திலிருந்து மேலும் ரூ.43 பணத்தை பிடித்து கொள்ளை லாபம் சம்பாதிப்பது கண்டிக்கத்தக்கது. மேலும், நுண்ணுர மையத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இதுகுறித்து தொழிலாளர் நல ஆணையருக்கு புகார் தெரிவித்துள்ளோம்’ என்றார்.

Tags : Ariyamangalam Division Office ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு