×

முத்துப்பேட்டை அருகே பணிகள் முடிந்தும் 6 ஆண்டுகளாக திறக்கப்படாத பொது சுகாதார வளாகம் பொலிவு இழந்து வீணாகி வரும் கட்டிடம்

முத்துப்பேட்டை, மே 9:  முத்துப்பேட்டை அருகே கட்டி முடிக்கப்பட்டு பூட்டியே கிடக்கும் சுகாதார வளாக கட்டிடம் வீணாகி வருவதால் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர் அரசு மருத்துவமனை சாலையில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பேருந்து நிறுத்தத்திலிருந்து செல்லும் இந்த சாலையில்தான், ஊராட்சி மன்ற அலுவலகம், கூட்டு குடிநீர் திட்ட சம்பு மற்றும் அலுவலகம், கால்நடை மருத்துவமனை, அரசு மேல்நிலைப்பள்ளி, வருவாய்த்துறை அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், அரசு மருத்துவமனை, காவல் நிலையம், தபால் நிலையம் உள்பட அலுவலகங்கள் உள்ளன.

இந்தநிலையில் இப்பகுதி மக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் அவர்கள் வசதிக்காக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி மன்ற அலுவலகம் வளாகத்தில் நபார்டு திட்டம் நிதியில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதில் ஆண்களுக்கு குளியலறை வசதியும் உள்ளது. அதேபோன்று பெண்களுக்கு என்றும் தனித்தனியாக சகலவசதிகளுடன் கட்டப்பட்டது. இதனால் ஊராட்சி மன்றம், கால்நடை மருத்துவமனை உட்பட அணைத்து துறை அலுவலகத்திற்கு வரும் வெளிபகுதி மக்களுக்கும், இப்பகுதி மக்களுக்கும் வசதியாக இருக்கும் என நினைத்து கட்டப்பட்ட இந்த சுகாதார வளாகம் கட்டிய நாளிலிருந்து இன்றுவரை இன்னும் திறப்புவிழா நடைபெறவில்லை. பூட்டியே கிடக்கிறது. ஊராட்சி நிர்வாகமும் இந்த சுகாதார வளாகத்தை கவனிக்காததால் போதிய பராமரிப்பு இல்லாமல் கட்டிடம் பொலிவு இழந்து வருவதுடன் அதன் உபகரணங்களும் வீணாகி வருகிறது.

இந்த பொது சுகாதார வளாகம் திறக்கப்படாததால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருன்கிறனர். இதனால் அப்பகுதி திறந்தவெளி கழிப்பறையாக மாறி விட்டதால் அங்கு மிகப்பெரிய சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் கொசு உற்பத்தி அதிகரித்து சுற்று பகுதியை சேர்ந்த பலருக்கு நோய்கள் பரவி அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே பொது சுகாதார வளாகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் காலம் தாழ்த்தாமல் முத்துப்பேட்டை ஒன்றிய நிர்வாகம் நாளுக்குநாள் வீணாகி வரும் இந்த சுகாதார வளாகத்தை  இப்பகுதி பொதுமக்கள் பயனடையும் வகையில் குறிப்பாக பெண்கள் நலன் கருதியும் சுகாதார சீர்கேட்டை சரி செய்யும் வகையிலும் திறந்து பயன் பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று இப்பகுதியை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : completion ,Muthupettai ,Public Health Camp ,
× RELATED ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் நாளை முதல் பணிகளை தொடங்க முடிவு