×

மன்னார்குடி-வடசேரி பைபாஸ் சாலையில் மின்விளக்குகள் எரியாததால் வழிப்பறி சம்பவங்கள் அதிகரிப்பு ஹைமாஸ் விளக்கு அமைக்க கோரிக்கை

மன்னார்குடி, மே 9:  மன்னார்குடி வடசேரி சாலையில் பிரியும் பைபாஸ் ரோட்டில் வழிபறி சம்பவம் நடப்பதை தடுக்க உயர் மின்கோபுர விளக்கு அமைக்க வேண்டுமென நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சிக்கு உட்பட்ட பட்டுக்கோட்டை வடசேரி செல்லும் சாலையில் உள்ள பைபாஸ் ரோட்டில் இரண்டு தெரு விளக்குகள் உள்ளது. அந்த இரண்டு விளக்குகளும் சரிவர எரிவதில்லை.  அப்பகுதியில் பயணிகள் நிழற்குடை ஒன்றும் உள்ளது. இந்த சாலையை  சுமார் 30க்கும் மேற்பட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பயன்படுத்துகின்றனர்.

மின் விளக்குகள் எரியாததால் மாலை நேரங்களில் நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. நகராட்சி நிர்வாகத்தினர் எப்போதாவது மின்விளக்கை சரி செய்து எரியவிட்டால் அவற்றை சமூக விரோதிகள் சிலர் உடைத்து விடுவதாக கூறப்படுகிறது. எனவே இப்பகுதியில் நகராட்சி நிர்வாகம் உயர் மின் விளக்கு கோபுரம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மகாதேவபட்டிணம் கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்  ராஜசோழன்  கூறுகையில், வடசேரி செல்லும் சாலையில் உள்ள பைபாஸ் ரோட்டில் மின் விளக்குகள் சரிவர எரியாததால் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டாலும் மாலை நேரங்களில் பெண்களிடம் செயின் பறிப்பு உள்ளிட்ட வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது.

பைபாஸ் ரோட்டின் மிக அருகில் தனியார் பள்ளி உள்ளது. சில நேரங்களில் மாணவர்கள் சிறப்பு வகுப்புகளை முடித்து விட்டு பேருந்துக்காக இரவு 8 மணி வரை அங்கு காத்திருக்கின்றனர். மேலும் அங்கு நகராட்சிக்கு சொந்தமான மின்சார சுடுகாடும் உள்ளது. மின் விளக்குகள் சரிவர எரியாததால் பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் இப்பகுதிக்கு வருவதற்கே அஞ்சுகின்றனர்.

மேலும் இப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு கண்காணிப்பு கேமராக்களும் சமீப காலமாக சரியாக இயங்குவதில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் வடசேரி  பைபாஸ் பிரிவு  ரோட்டில் உயர் மின் விளக்கு கோபுரம் அமைத்து தர வேண்டும். மேலும் காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் பைபாஸ் ரோட்டில் ரோந்து பணி செல்லும்போது வடசேரி பிரிவு ரோட்டையும் கூடுதலாக கண்காணிக்க வேண்டும் என்றார்.

Tags : hijackings ,Himalayas ,bypass road ,Mannargudi-Vadasseri ,
× RELATED டிரைவர் மீது தாக்குதல்