×

வடுவூர் பகுதியில் கோடை ெநல் சாகுபடி வயல்களில் நீர் பாய்ச்ச முடியாமல் பாதிப்பு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

மன்னார்குடி, மே 9; வடுவூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிலத்தடி நீரை நம்பி  கோடை நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு தடையில்லா மும்முனை மின்சாரத்தை அரசு வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. திருவாரூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 7 ஆண்டு காலமாக பருவமழை பொய்த்தும், காவிரி நீரின்றி ஆறுகள் வறண்டு, நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கடும் வறட்சி நிலவியதால் கோடை மற்றும் குறுவை சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து சம்பா பயிருக்கு தேவையான அளவு தண்ணீர்  கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டு வந்தது. உரிய நேரத்தில் தேவையான தண்ணீர் கிடைக்காததால் மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்ததோடு  மிகுந்த மன உளைச்சலுக்கும் உள்ளாகி  வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் விவசாயிகள் கடன் வாங்கி  சாகுபடிகளை செய்து விட்டு தினம் தோறும் அச்சப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டிய அவலமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் வடுவூர், எடமேலையூர், எடகீழையூர், பருத்திக்கோட்டை, மூவாநல்லூர், வடுவூர் புதுக்கோட்டை உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நிலத்தடி நீரை நம்பி  விவசாயிகள்  கோடை நெல் சாகுபடியில் ஈடுபட்டனர். கடும் கோடை காரணமாக நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. இருந்தும் ஆழ்துளை கிணறுகளில் மின்மோட்டார்களை பொருத்தி கோடை சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களுக்கு விவசாயிகள் நீர் பாய்ச்சி வருகின்றனர்.

கோடை சாகுபடி செய்யப்பட்ட பல இடங்களில் இன்னும் 20 நாட்களுக்குள் அறுவடை பணிகள் துவங்க உள்ளது. அதனால் வயல்களுக்கு  கடைசி கட்ட நீர் பாய்ச்ச வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர். ஆனால் வெயிலின் தாக்கம், அடிக்கடி முன்னறிவிப்பின்றி ஏற்படும் மின் தடையால் மின் மோட்டார்கள் இயங்காமல் உள்ளதால் வழக்கம் போல்  கோடை சாகுபடியும் பாதிக்கப்படுமோ என்கிற அச்சத்தில் விவசாயிகள் மன இறுக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதுகுறித்து எடகீழையூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சீனிவாசன் கூறுகையில், பருவ மழை பொய்த்து போனதாலும், தண்ணீர் வரத்தின்றி நீர் நிலைகள் காய்ந்து கிடப்பதினாலும்  நிலத்தடி நீரை மட்டுமே முழுமையாக நம்பி கோடை நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளோம். ஏக்கர் ஒன்றுக்கு சராசரியாக 30 முதல் 40 ஆயிரம் வரை செலவு பிடிக்கிறது. கோடை நெல் சாகுபடி செய்யப்பட்ட பல்வேறு ஊர்களில் இன்னும் 15 தினங்களில் அறுவடை பணிகள் துவங்க உள்ளன. அதனால் வயலுக்கு கடைசி கட்ட தண்ணீர் விட வேண்டும்.  பல இடங்களில் நெல் பூத்து கதிர் பிடிக்கும்  பருவத்தில் உள்ளது. அதற்கும் தண்ணீர் தேவைப்படுகிறது.

தமிழக அரசு விவசாய பயன்பாட்டிற்காக  தினமும் காலையில் 6 மணி நேரமும், இரவில் 6 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்குவதாக கூறுகிறது. ஆனால் நடைமுறையில் அவ்வாறு இல்லை.  கடும் கோடை நிலவும் சூழலில் அடிக்கடி முன்னறிவிப்பின்றி மின் தடை ஏற்படுவதால்  பயிர்களுக்கு தேவையான தண்ணீரை பாய்ச்சுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே கோடை நெல் சாகுபடியை காக்க விவசாயிகளுக்கு தடையில்லா மும்முனை மின்சாரத்தை அரசு வழங்க வேண்டும்.

கோடையில் சாகுபடி செய்யப்பட்டு பல ஊர்களில் அறுவடை பணிகள் துவங்க உள்ள நிலையில்  பல இடங்களில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு விட்டன. அரசு இதில் உரிய கவனம் செலுத்தி தேவைப்படும் இடங்களில்  நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். முக்கியமாக நெல்லுக்கு  தற்போது குவிண்டால் ஒன்றுக்கு ரூ 1840 என வழங்கப்படுவதை உயர்த்தி குறைந்த பட்சம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 வழங்க வேண்டும் என கூறினார்.

Tags : areas ,area ,Vaduvur ,
× RELATED மாவட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு: தடுப்பு நடவடிக்கை தேவை