×

மழை பெய்ய வேண்டி தஞ்சை பெரிய கோயிலில் வருண பகவானுக்கு யாகம்

தஞ்சை, மே 9: மழை பெய்ய வேண்டி தஞ்சை பெரிய கோயிலில் உள்ள வருண பகவானுக்கு 2 மணி நேரம் சிறப்பு யாகம் நடந்தது. கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. மேலும் நீர்நிலைகளில் தண்ணீரின் தேக்கம் இல்லாமல் உள்ளது. இதே நிலை நீடித்தால் குடிப்பதற்கு தண்ணீர் கிடைப்பது அரிதாகிவிடும். இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்து கோயில்களிலும் மழை வேண்டி யாகம் நடத்துமாறு ஆணையர் பனீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி நேற்று காலை தஞ்சை பெரிய கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது. பெரிய கோயிலின் மேற்கு பகுதி திருச்சுற்றில் வருண பாகவன் சன்னதி அமைந்துள்ளது. இந்த சன்னதியில் நேற்று காலை கலசங்கள் நிர்மாணிக்கப்பட்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. சிவச்சாரியார்கள், வேதமந்திர பாராயணம் மற்றும் வருண காயத்ரி மந்திர பாராயணம் முழங்கினர். இதன்பின்னர் வருண பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து மகா பூர்ணாஹூதியுடன் யாகம் நிறைவு பெற்றது. மேலும் மழையை வரவழைக்கும் வகையில்  தவில், நாதஸ்வரம், வயலின் உள்ளிட்ட வாத்திய கருவிகளில் மேகவர்ஷினி, அமிர்தவர்ஷினி, கோதாரி, ஆனந்த பைரவி, ரூப கல்யாணி போன்ற ராகங்களும் வாசிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மழை வேண்டி தரிசனம் செய்தனர்.

திருவையாறு: திருவையாறு அருகே திங்களூர் கைலாசநாதர் கோயிலில் மழை பெய்ய வேண்டிய யாகம் நடந்தது. மேலும் கைலாசநாதர், பெரியநாயகிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. செயல் அலுவலர் சீனிவாசன், திருக்கோவில் தொழிலாளர் யூனியன் மாநில பொது செயலாளரும் திங்களூர் கைலாசநாதர் கோயில் மேலாளருமான கண்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

கும்பகோணம்: கும்பகோணம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதி முன்புள்ள நந்திபகவானை சுற்றிறு சிமென்ட் தொட்டி கட்டப்பட்டு அதில் தண்ணீர் ஊற்றி, வருண ஜபம், வருண மகாயாகம், வேதபாராயணம், மேகராக குறிஞ்சி பண்ணுடைய திருமுறை பாராயணம், மேகவர்ஷினி முதலான ராகங்களுடன் நடந்தது. இதேபோல் திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு யாகம் நடந்தது.

Tags : Vaanai Bhagavan Yagam ,Tanjore Big Temple for Rain ,
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில்...