×

கோடை காலத்தையொட்டி வன உயிரினங்களின் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டிகள் அமைப்பு கலெக்டர் தகவல்

புதுக்கோட்டை, மே 9: புதுக்கோட்டை மாவட்டத்தில் வனத்துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை வகித்து பேசியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் 5.6 சதவீத அளவிற்கு வனப்பரப்பளவு உள்ளது. இங்கு வசிக்கும் வன உயிரினங்களின் கோடைகால தண்ணீர் தேவைகளை கருத்தில் கொண்டு பல்வேறு இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கீரனூர், ஆலடிபெருமத்துக்காட்டில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையில் தற்போது வரை நீர் சேமிக்கப்பட்டுள்ளது. இதில் மயில்கள், மான்கள், முயல்கள், உடும்புகள் உள்ளிட்ட வனவாழ் உயரினங்கள் நீர் அருந்தி வருகின்றன.

மேலும் அரிமளம் வனத்துறை ஆராய்ச்சி மையம் மற்றும் பொன்னமராவதி செவிலிமலை உள்ளிட்ட இடங்களிலும் 50 லிட்டர் கொள்ளளவு உள்ள தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு தொடர்ச்சியாக வனத்துறையால் நீர் நிரப்பப்பட்டு வருகிறது. இதனால் வனவாழ் உயிரினங்களுக்கு கோடைகாலத்தில் தண்ணீர் பற்றாக்குறை இன்றி வழங்கப்படுகிறது. மேலும் வனப்பகுதிகளில் தண்ணீர் தேவை ஏற்படும் இடங்களை கண்டறிந்து தண்ணீர் தொட்டிகள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வனத்துறையின் சார்பில் காடுகளின் பரப்பளவை அதிகரிக்க செய்யும் வகையில்  பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் வனப்பாதுகாப்பு, வனத்தின் பசுமைப்போர்வையை அதிகரிக்க செய்தல், வன உயிரினங்கள் பாதுகாப்பு, பட்டா நிலங்களில் மரப்பயிர்களை உற்பத்தி செய்தல், கடல் வாழ் உயிரினங்களான கடல்பசு மற்றும் டால்பின் போன்றவற்றை பாதுகாத்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்றார்.  கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...