×

மழை பெய்ய வேண்டி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் மண்டல யாகம் துவக்கம்

பெரம்பலூர், மே 9: மழை பெய்ய வேண்டி பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் நந்தியம்பெருமானை நீருக்குள் மூழ்க வைத்து ஒரு மண்டல யாகம் நேற்று துவங்கியது. தமிழகத்தில் போதிய மழையின்றி வறட்சி நிலவி வரும் சூழலில் மழைக்காக கோயில்களில் சிறப்பு யாகம் நடத்த அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி பெரம்பலூர் பிரம்ம புரீஸ்வரர் கோயிலில் நேற்று மழைக்காக ருத்ரயாக ஜெபம் நடத்தப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முருகையா, செயல் அலுவலர் மணி, முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், கோவிந்தராஜ் முன்னிலையில் நந்தியம்பெருமானுக்கு நாற்புறமும் சுவரெழுப்பி சிறப்பு யாகம் செய்த புனிதநீர் நிரப்பி 48 நாட்களென ஒரு மண்டலத்துக்கான பூஜை செய்யும் பணிகள் நேற்று துவங்கியது.

பின்னர் ருத்ய ஜெபயாகத்துடன் பிரம்மபுரீஸ்வரர், அகிலாண்டேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பிறகு யாககுண்டத்தில் பூர்ணாஹதி செய்யப்பட்டு புனிதநீர் கடங்களுடன் கோயிலை வலம் வந்து மூலவருக்கும் நந்திபெருமானுக்கும் சிறப்புஅபிஷேகம் நடத்தப்பட்டது. பூஜைகளில் பெரம்பலூர், அரணாரை, துறைமங்கலம், எளம்பலூர், விளாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags : yatra ,Brahmapureeswarar temple ,
× RELATED தமிழகம் வரும் ராம நவமி யாத்திரை குழு...