×

ஜி.ராமலிங்கபுரம் கண்மாய் வளைவில் அடிக்கடி விபத்து

ஆண்டிபட்டி, மே 9: ஆண்டிபட்டி அருகே உள்ள ஜி.ராமலிங்கபுரம் கண்மாய் வளைவினால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. பெரும் விபத்து ஏற்பட்டு உயிர் பலி நடக்கும் முன் குளத்துக் கரையின் உயரத்தை குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஜி.உசிலம்பட்டி ஊராட்சியில் ராமலிங்கபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் கிழக்குப் பகுதியில் குளத்தை ஒட்டியே நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலை ஆண்டிபட்டியில் ஆரம்பித்து கன்னியப்பபிள்ளைபட்டி, எரதிம்மக்காள்பட்டி, ஜி.உசிலம்பட்டி வழியாக கண்டமனூர் மாநிலச்சாலையை இணைக்கிறது. மேலும் இப்பகுதி விவசாய நிலங்களுக்கும், விளைந்த காய்கனிகளை ஏற்றுவதற்கு அதிக அளவிலான வாகனங்கள் வந்து செல்வது மட்டுமின்றி பள்ளி, கல்லூரி செல்லும் வாகனங்கள் என ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வரும் முக்கியச் சாலையாக திகழ்கிறது.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாக ஜி.ராமலிங்கபுரம் குளத்து வளைவில் எதிரே வாகனங்கள் வருவது தெரியாத காரணத்தினால் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடைபெறுவது மட்டுமின்றி உயிர்பலிகளும் ஏற்படுகிறது.

இதனால் இப்பகுதி விபத்துக்கள் நடக்கும் பகுதியாக உள்ளதால் ஊராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் இணைந்து கரையின் உயரத்தை குறைத்தோ அல்லது கரையை சிறிது தூரம் மாற்றி அமைத்தால் மட்டுமே விபத்துக்களை தடுக்க முடியும் என்று வாகன ஓட்டிகள் கூறியுள்ளனர்.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், இந்த குளத்திற்கு மழை காலங்களில் மட்டுமே நீர்வரத்து ஏற்படும். இதனால் இப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளின் நீர்மட்டம் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். அப்போது குளம் சிறிதாகவே இருந்தது. இதனையடுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் குளத்தை தூர் வாரி கரைகளை வலுப்படுத்திய போது தண்ணீர் தேங்கும் உயரத்தை விட கரையை உயர்த்தி போட்டுவிட்டனர். இதனால் கரையில் மரங்கள் வளர்ந்து இருப்பது மட்டுமின்றி வளைவில் எதிரே வரும் வாகனங்களும் தெரியாததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் பலியும் ஏற்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் வாகன ஓட்டிகளின் சிரமங்களை கருத்தில் கொண்டு கண் தெரியாத வளைவுப் பகுதியை சரி செய்து தர வேண்டும் என்றனர்.

Tags : G.Ramalingapuram ,eye ramp ,
× RELATED கால்வாய் தூர்வாரும் பணி ஜரூர்