×

சப்- கலெக்டர் அலுவலகத்தில் வாக்கு எண்ணும் ஊழியர்களுக்கு பயிற்சி

பொள்ளாச்சி, மே 9:  பொள்ளாச்சி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் மேற்பார்வையாளர்களுக்கான வழிகாட்டுதல் கூட்டம் சப்- கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் பொள்ளாச்சி, வால்பாறை(தனி), மடத்துக்குளம், உடுமலை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொத்தமுள்ள 1691 வாக்குச்சாவடிகளில், கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.


வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், வாக்குச்சாவடிகளில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், அந்தத்த பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையமான பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
  ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனி அறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு, அங்கு  3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. வரும் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், பொள்ளாச்சி சப்- கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, வாக்கு எண்ணிக்கை கணக்கெடுப்பில் ஈடுபடும் மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவி மேற்பார்வையாளர்களுக்கான வழிகாட்டுதல் கூட்டம் நடந்தது.


  இதற்கு, கோட்டாட்சியரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான ரவிக்குமார் தலைமை தாங்கினார். வால்பாறை சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் துரைசாமி, தாசில்தார்கள் ரத்தினம், வெங்கடாச்சலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் உயர்அதிகாரிகள் பேசியது: பொள்ளாச்சி மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடக்கும் மையத்தில் வரும் 23ம் தேதி அதிகாலை சுமார் 5 மணியளவில் அனைத்து வாக்கு எண்ணிக்கை கணக்கெடுப்பு மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவி மேற்பார்வையாளர்கள்  இருக்க வேண்டும்.  


வாக்கு எண்ணிக்கை துவங்குவதற்கு முன்பு, தனி அறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எவ்வாறு  பூத் வாரியாக கொண்டு செல்லப்படுகிறது என கண்காணிக்க வேண்டும்.  இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது ஒவ்வொரு சுற்றிலும் எத்தனை வாக்குகள் எந்தெந்த வேட்பாளருக்கு பதிவாகியுள்ளது என்பது குறித்த சரியான எண்ணிக்கை தகவலை பதிவு செய்வதுடன், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் உடனுக்குடன் தெரிவித்து ஒப்புகை பெற வேண்டும். அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற கண்காணிப்பில் முழு வீச்சில்  ஈடுபட வேண்டும். இவ்வாறு உயர்அதிகாரிகள் பேசினர்.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்