×

மேம்பாட்டு பணிகளுக்கு பின்பு திறக்கப்பட்ட பைன் பாரஸ்ட் பகுதியை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்

ஊட்டி, மே 9:  நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட ஊட்டி - கூடலூர் சாலையில் உள்ள பைன் பாரஸ்ட் பகுதியை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 ஊட்டி - கூடலூர் சாலையில் தலைக்குந்தா அருகே காமராஜர் சாகர் அணை உள்ளது. இந்த அணையின் ஒரு பகுதியில் பைன் மரங்கள் நிறைந்த வனபகுதியை காண சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். சாலையில் இருந்து பைன் மரங்களுக்கு நடுவே அணைக்கு நடந்து செல்லும் பகுதி சரிவான பகுதியாக உள்ளது. மரத்தின் இலைகள் உதிர்ந்துள்ள நிலையில், முறையான பாதை இல்லாததால் சுற்றுலா பயணிகள் வழுக்கி விழுகின்றனர்.
  இந்நிலையில், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி இப்பகுதியை மேம்படுத்த வனத்துறை திட்டமிட்டது.

இதற்காக கடந்த ஆண்டு ஜூலை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்கப்படவில்லை. பைன் பாரஸ்ட் சரிவான பகுதிகளில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல வசதியாக தட்டையான கற்கள் கொண்டு நடைபாதை அமைக்கப்பட்டது. ைபன் மர கட்டைகளை கொண்டு இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் திறக்கப்படாமல் இருந்து வந்தது.கோடை சீசன் துவங்கிய நிலையில் சுற்றுலா பயணிகள் பார்வையிட வசதியாக பைன் பாரஸ்ட் பகுதியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் ஊட்டிக்கு வர கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து சுமார் 10 மாத இடைவெளிக்கு பின்பு கடந்த மாத இறுதியில் பைன் பாரஸ்ட் பகுதிக்கு திறக்கப்பட்டது. இதற்கு ரூ.10 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனை தற்போது ஏராளமான சுற்றுல பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர். காமராஜர் சாகர் அணை கரையோரம் குதிரை சவாரியும் செய்து மகிழ்கின்றனர். முத்தநாடுமந்து சூழல் மேம்பாட்டு குழுவினர் தூய்மையாக பராமரித்து வருகின்றனர்.

Tags : Pine Forest ,
× RELATED குடியரசுத் தினம்: கொடைக்கானல் சுற்றுலா தலங்களை பார்வையிட நாளை இலவசம்